செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. தமிழகம் முழுவதும் சோதனை
FIR Against Senthil Balaji: 45 டாஸ்மாக் டிப்போக்களுக்கான போக்குவரத்து டெண்டர்களிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், ஒருவரின் வரைவோலைகளை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பார் ஒப்பந்தம் பெற்றவர்களே பார்களை நடத்தாமல், மூன்றாம் நபர்கள் மூலம் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 29, 2026: டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக, தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 41 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர், முன்னாள் மூத்த மண்டல அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன.
டெண்டர் நடைமுறைகளில் பல்வேறு விதிமீறல்கள்:
இந்த நிலையில், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியாகியுள்ளது. அதில், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர் நடைமுறைகளில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற 857 பார் டெண்டர்களில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், சிலருக்கு மட்டுமே சாதகமாக டெண்டர்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
டெண்டர்களில் பங்கேற்றவர்கள் சிண்டிகேட் அமைத்து, ஒரே வங்கியில் இருந்து தொடர்ச்சியான வரிசை எண்களைக் கொண்ட வரைவோலைகளை (DD) சமர்ப்பித்தது கூட்டுச்சதிக்கான ஆதாரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மூடப்பட்டதாகக் கூறப்பட்ட 284 பார்கள் உரிமம் புதுப்பிக்கப்படாமலேயே செயல்பட்டு வந்ததால், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மட்டும் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்ட புகார்.. மு.க. ஸ்டாலின் மீதான வழக்கு தள்ளுபடி
டெண்டர்களில் முறைகேடுகள்:
45 டாஸ்மாக் டிப்போக்களுக்கான போக்குவரத்து டெண்டர்களிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், ஒருவரின் வரைவோலைகளை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பார் ஒப்பந்தம் பெற்றவர்களே பார்களை நடத்தாமல், மூன்றாம் நபர்கள் மூலம் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் செயல்பட்ட “கரூர் கும்பல்” என்ற சிண்டிகேட், தமிழகம் முழுவதும் பார் ஒப்பந்தங்களை கட்டுப்படுத்தியதாகவும், சில அரசியல்வாதிகள் “கட்சி நிதி” என்ற பெயரில் பார் உரிமையாளர்களிடம் இருந்து பணம் வசூலித்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் விஜய்.. பயணிகளுடன் மெட்ரோவில் பயணம்..
போலி இன்வாய்ஸ்கள் மூலம் மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்று, அந்த பணத்தை டாஸ்மாக் அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கி விநியோக ஒப்பந்தங்கள் பெறப்பட்டதாகவும், குறிப்பிட்ட மதுபான நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
யார் இந்த பவர் புரோக்கராக:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி ரதேஷ் ராஜ் சண்முகவேல், டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிகாரப்பூர்வமற்ற “பவர் புரோக்கராக” செயல்பட்டு, பார் டெண்டர்கள், அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் மதுபான விநியோகத்தில் தலையீடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 முதல் 2025 வரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் மேலாண்மை இயக்குநர் விசாகன், முன்னாள் மூத்த மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர், ரதேஷ் ராஜ் சண்முகவேல், மூலனூர் கார்த்திக் உள்ளிட்டோர் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல் மற்றும் கையாடல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு அமலாக்கத்துறை விசாரணையில், டாஸ்மாக்கில் சுமார் ₹1,000 கோடி மதிப்பிலான முறைகேடுகள் நடைபெற்றதாகக் கண்டறியப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேர விவகாரத்தில் வழக்கை எதிர்கொண்டு வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, இந்த புதிய வழக்குப்பதிவு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.