வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்ட புகார்.. மு.க. ஸ்டாலின் மீதான வழக்கு தள்ளுபடி
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேட்புமனுவில் அறக்கட்டளை தொடர்பான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டிருப்பது குற்றம் என்றும், அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஜூலை 29, 2026: கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கு, மனுதாரர் திரும்பப்பெற்றதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில், தி.மு.க. அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பதையும், அந்த அறக்கட்டளைக்காக சமீபத்தில் செங்கல்பட்டு அருகே ரூ. 2 கோடியே 27 லட்சம் மதிப்பிலான நிலம் வாங்கப்பட்டதையும் மறைத்துள்ளதாகக் கூறி,
இதுதொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சிவஞானசம்பந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் படிக்க: சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் விஜய்.. பயணிகளுடன் மெட்ரோவில் பயணம்..
மு.க ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு:
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேட்புமனுவில் அறக்கட்டளை தொடர்பான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டிருப்பது குற்றம் என்றும், அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், இதுபோன்ற விவகாரங்களில் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகாராக மட்டுமே வழக்கு தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டது.
அறக்கட்டளையின் சொத்துகள் தனிப்பட்ட சொத்துகளாக கருதப்படாது:
வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேட்புமனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும், அறக்கட்டளையின் சொத்துகள் தனிப்பட்ட சொத்துகளாக கருதப்படாது என்றும் தெரிவித்தனர். மேலும், அந்தச் சொத்துகளுடன் வேட்பாளருக்கு தனிப்பட்ட தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லாததால் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும் படிக்க: இடுக்கு பிள்ளையாரை தரிசிக்க புதிய கட்டுப்பாடுகள்: யாருக்கெல்லாம் தடை? முழு விவரம்!
இதையடுத்து, வழக்கை திரும்பப்பெறுவதாக மனுதாரர் தெரிவித்ததை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், சட்டப்படி உரிய நிவாரணத்தை நாடிக்கொள்ள மனுதாரருக்கு அனுமதி வழங்கினர்.