AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறிப்பு.. மாவட்ட கண்காணிப்பாளரிடம் பெண் பரபரப்பு புகார்..

"இந்த விவகாரம் குறித்து வெளியே தெரிவித்தாலோ அல்லது காவல் நிலையத்தில் புகார் அளித்தாலோ குடும்பத்தையே அழித்துவிடுவோம். உன்னையும் உன் பிள்ளைகளையும் உயிருடன் விடமாட்டோம்" என கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தனது மைனர் மகளின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளிவிடுவோம் என மிரட்டியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறிப்பு.. மாவட்ட கண்காணிப்பாளரிடம் பெண் பரபரப்பு புகார்..
கோப்பு புகைப்படம்
Sekaran S
Sekaran S | Published: 29 Jul 2026 22:29 PM IST

ஜூலை 29, 2026: கோவை மாவட்டம் பன்னிமடையைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மைனர் மகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாகக் கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்பான புகார் மனு அளித்துள்ளார். புகாரின்படி, அந்தப் பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். குடும்பச் செலவுக்காக தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், அவர்களது வீட்டின் அருகே பியூட்டிஷியனாக பணியாற்றி வந்த துஷரா என்பவர் குடியேறி, அந்தக் குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகியுள்ளார்.

சிறுமியின் புகைப்படங்கள் இருப்பதாக மிரட்டிய துஷரா:

இதையடுத்து, 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் துஷரா, அந்தப் பெண்ணை தனியாக அழைத்து, அவரது 17 வயது மைனர் மகளுடன் ‘கார்த்திக்’ என்பவர் தொடர்பில் இருப்பதாகவும், அவரிடம் மகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாகவும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்குவதற்கு கார்த்திக் ரூ.5 லட்சம் கேட்பதாக துஷரா கூறியதாகவும், மகளின் எதிர்காலம் மற்றும் குடும்பத்தின் கௌரவத்தை கருத்தில் கொண்டு, தனது நகைகளை விற்றும், உறவினர்களிடம் கடன் பெற்றும், கூகுள் பே மற்றும் ரொக்கமாக பல்வேறு தவணைகளில் பணம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, துஷரா மற்றும் அவர் அறிமுகப்படுத்தியதாக கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பயன்படுத்திய ‘கார்த்திக்’ என்பவருக்கு மொத்தம் ரூ.8.65 லட்சம் வழங்கியதாகவும், பின்னர் துஷரா பொய்யான தகவல்களை கூறி பணம் பறித்தது தெரியவந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு, தாம் வழங்கிய பணத்தை திருப்பிக் கேட்டபோதும், காவல்துறையில் புகார் அளிக்க முயன்றபோதும், துஷரா மற்றும் கார்த்திக் ஆகியோர் தொடர்ந்து மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்:

மேலும், அடையாளம் தெரியாத சிலரை வைத்து தங்களது குடும்பத்தினரின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும், வீட்டை விட்டு வெளியே சென்றாலோ, வழக்கறிஞர் அல்லது காவல்துறையினரை சந்திக்கச் சென்றாலோ, அவர்கள் பின்தொடர்ந்து அச்சுறுத்துவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

“இந்த விவகாரம் குறித்து வெளியே தெரிவித்தாலோ அல்லது காவல் நிலையத்தில் புகார் அளித்தாலோ குடும்பத்தையே அழித்துவிடுவோம். உன்னையும் உன் பிள்ளைகளையும் உயிருடன் விடமாட்டோம்” என கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தனது மைனர் மகளின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளிவிடுவோம் என மிரட்டியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதனால் குடும்பத்தினர் கடும் அச்சத்துடனும், மன உளைச்சலுடனும் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்த சம்பவம்.. 100க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்..

இதுதொடர்பாக கடந்த ஜூன் 26-ஆம் தேதி தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, புகாரை பெற மறுத்ததாகவும், பின்னர் ஜூன் 29-ஆம் தேதி காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஆன்லைன் மூலம் புகார் அளித்ததையடுத்து மனு ரசீது வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு:

எனினும், இதுவரை உரிய விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்றும், எதிரிகளின் மிரட்டலால் தங்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, துஷரா, ‘கார்த்திக்’ எனக் கூறப்படும் நபர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடும்பத்தினருக்கு காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மிரட்டி பறிக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.8.65 லட்சத்தை மீட்டுத் தருவதுடன், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us