லைக்குக்கு ஆசைப்பட்டு சிக்கிய சிறுவர்கள்.. தூத்துக்குடியில் கத்தியுடன் ரீல்ஸ்.. தூக்கி சென்ற போலீஸ்!
Thoothukudi Police Arrested Two Boys: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ பதிவு செய்து ரீல்ஸ் வெளியிட்ட இரு சிறுவர்களை காயல்பட்டினம் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அருகே உள்ள வண்டிமலச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ( 18 வயது). இதே பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர்கள் இருவரும் நண்பர்களாவர். இந்த நிலையில், இருவரும் சேர்ந்து பொதுமக்களுக்கு அச்சத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையில் கத்தி உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை கையில் வைத்தவாறு வீடியோ பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களாக பதிவேற்றம் செய்து வந்தனர். இந்த ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு, பல்வேறு தரப்பட்ட மக்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். பலர் இதற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த ரீல்ஸ் வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு சென்றது.
வன்முறை ரீல்ஸ் வீடியோ குறித்து விசாரணை
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி, அந்த வீடியோக்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அந்த வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது. அதில், வரும் சிறுவர்கள் யார். ரீல்ஸ் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்ட சமூக வலைதள கணக்குகள் உள்ளிட்டவற்றை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில், ரீல்ஸ் வெளியிட்ட சிறுவர்கள் குறித்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.
மேலும் படிக்க: தொழில்துறையில் மாபெரும் பாய்ச்சல்.. முதல்வர் விஜய் முன்னிலையில் புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!




இரு சிறுவர்களை கைது செய்த போலீசார்
அதன் அடிப்படையில், காயல்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட சிறுவர்களான மதன் உள்ளிட்ட இருவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் வீடியோக்கள் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்ததை ஒத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, அந்த சிறுவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைப்பு
இதை தொடர்ந்து, மதன் என்ற சிறுவன் தூத்துக்குடி கிளை சிறையிலும், 16 வயதான மற்றொரு சிறுவன் தூத்துக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். கையில் பயங்கர ஆயுதங்களுடன் சிறுவர்கள் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவமும், அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு?