தொழில்துறையில் மாபெரும் பாய்ச்சல்.. முதல்வர் விஜய் முன்னிலையில் புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!
TN CM Vijay Guidance Tamil Nadu Visit: சென்னை நந்தனத்தில் உள்ள 'கைடன்ஸ் தமிழ்நாடு' அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்த முதலமைச்சர் விஜய், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மின்சார வாகனம், அதிநவீன உற்பத்தி மற்றும் உயர்கல்வித் துறைகள் சார்ந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
சென்னை, ஜூலை 30: தமிழ்நாட்டிற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன், சென்னை நந்தனத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனமான ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ அலுவலகத்திற்குப் முதலமைச்சர் விஜய் நேரில் வருகை தந்தார். அங்கு அவர் முன்னிலையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியத் தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும் படிக்க: அதிருப்தியில் ஓ பன்னீர்செல்வம்.. திமுகவிலிருந்து விலகி த.வெ.கவில் இணைய திட்டமா?
முக்கியத் துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மின்சார வாகன உற்பத்தி, வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிநவீன உற்பத்தி ஆகிய துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சுற்றுச்சூழல் காப்பு மற்றும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் EV உதிரிபாகங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி நிறுவனங்களுடன் கை கோர்க்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தி சார்ந்த திட்டங்களும் அடக்கம்.
புதிய தொழிற்கொள்கை குறித்து ஆலோசனை:
இந்த ஒப்பந்தங்களின் மூலம் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோருக்கும் இளைஞர்களுக்கும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு வரும் புதிய தொழிற்கொள்கை தொடர்பாகவும் முதலமைச்சர் விஜய் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகளை விரைவாக வழங்கும் நடைமுறையை உறுதி செய்யப்பட உள்ளது.
முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை:
புதிய தொழிற்கொள்கை தயாரிப்புப் பணிகள் எந்தக் கட்டத்தில் உள்ளன, தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாநிலத்தில் தொழில் தொடங்குவதை மேலும் எளிமையாக்குவது மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சென்னை, கோவை, ஒசூர் மட்டுமல்லாது 2-ஆம் மற்றும் 3-ஆம் நிலை நகரங்களிலும் தொழிற்பேட்டைகளை விரிவாக்கம் செய்வதற்கான உத்திகள் வகுக்கப்பட்டன.
மேலும் படிக்க: குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் வெட்டிப் படுகொலை.. நடுநடுங்க வைக்கும் கொடூரம்!!
உயர் அதிகாரிகள் பங்கேற்பு:
இந்நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தொழில் துறைச் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ், கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பின் மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கைடன்ஸ் தமிழ்நாடு அலுவலகத்திற்கு முதலமைச்சர் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டது, வரவிருக்கும் புதிய தொழிற்கொள்கை குறித்த எதிர்பார்ப்பை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.