சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்.. விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு..
அந்தப் பணிகளை விரைந்து முடித்து, பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவையை விரைவில் தொடங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் காலை நேர போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் கட்டுமானப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 30, 2026: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மக்களின் அன்றாட போக்குவரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். மாதந்தோறும் சுமார் ஒரு கோடி பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்வதாக கூறப்படுகிறது. தற்போது சென்னை மெட்ரோ ரயில் சேவை விமான நிலையம்–விம்கோ நகர் மற்றும் சென்னை சென்ட்ரல்–பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள்:
இதன் தொடர்ச்சியாக, 118 கிலோமீட்டர் நீளத்தில் மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாதவரம்–சோழிங்கநல்லூர், பூந்தமல்லி–கலங்கரை விளக்கம் மற்றும் மாதவரம்–சிறுசேரி சிப்காட் ஆகிய வழித்தடங்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: அதிருப்தியில் ஓ பன்னீர்செல்வம்.. திமுகவிலிருந்து விலகி த.வெ.கவில் இணைய திட்டமா?
இந்த நிலையில், ஜூலை 29-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து நந்தனம் வரை பொதுமக்களுடன் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்ட அவர், நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் விஜய்:
அதனைத் தொடர்ந்து, கிண்டி முதல் போரூர் வரை ஆளில்லா மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பொதுமக்களின் வசதிக்காக இரண்டாம் கட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். போரூர் முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பெரும்பாலான பணிகள் நிறைவடைந்திருந்தாலும், ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் வெட்டிப் படுகொலை.. நடுநடுங்க வைக்கும் கொடூரம்!!
பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தல்:
இதையடுத்து, அந்தப் பணிகளை விரைந்து முடித்து, பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவையை விரைவில் தொடங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் காலை நேர போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் கட்டுமானப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்றும், இரவு நேரங்களில் கட்டுமானப் பணிகளை அதிகரித்து திட்டத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.