பழனி நில முறைகேடு வழக்கு.. சஸ்பெண்ட் சார்-பதிவாளரிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை!
Palani Sub Registrar CBCID Question : பழனி முருகன் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் சஜிதா தலைமையிலான போலீசார் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து. ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் சஜிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி போலீசார் இன்று திங்கள்கிழமை ( ஜூலை 27- ஆம் தேதி) அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.
சார் பதிவாளரிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை
இதற்காக அவருக்கு சி. பி. சி. டி. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன் அடிப்படையில், அவர் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான நிலையில், அவரிடம் கோவில் நில மோசடி தொடர்பாகவும், பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாகவும் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் சஜிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையானது சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதே போல, இந்த வழக்கில் தொடர்புடையவர்களான நிலத்தை விற்றவர், வாங்கியவர் உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வேலூரில் விரைவில் விமான நிலையம் திறக்கப்படும்.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்!




பழனி நில முறைகேடு சம்பவத்தின் பின்னணி
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை கோவில் அறக்கட்டளை உறுப்பினரான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான முருகதாஸ் என்பவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளதுரை, பழனியை சேர்ந்த சேதுபதி ஆகியோருக்கு ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்திருந்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், கோவில் நிர்வாகம் தரப்பில் பழனி அடிவார காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற காரணம்
இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதன் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அத்துடன், இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, சிபிசிஐடி விசாரணையில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?.. தெளிவுபடுத்திய சகாயம் ஐ.ஏ.எஸ்!!