திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?.. தெளிவுபடுத்திய சகாயம் ஐ.ஏ.எஸ்!!
IAS Sagayam Speech: நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற போட்டித் தேர்வு விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம், திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது முக்கியமல்ல என்றும், TNPSC தேர்வுகளில் இளைஞர்கள் வெற்றி பெற்று அரசு அதிகாரிகளாவதே தமக்கு முதன்மையானது என்றும் தெரிவித்துள்ளார்.
நெல்லை, ஜூலை 27: திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது தமக்கு முக்கியமல்ல; TNPSC குரூப்-1 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழக இளைஞர்களும் மாணவர்களும் வெற்றிபெற்று நேர்மையான அதிகாரிகளாக உருவெடுப்பதே தமக்கு முதன்மையானது என்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில், ‘ஸ்மார்ட் லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான இலவச வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் தேர்வர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இதையும் படிக்க: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு.. தயாராகும் ஊழல் பட்டியல்.. நிதித்துறை அமைச்சர் அதிரடி!
திருச்சி கிழக்கு தொகுதி எனக்கு முக்கியமல்ல:
சமீபகாலமாக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் ‘திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சகாயம் போட்டியிடப் போகிறாரா?’ என்ற ஊகங்கள் தீவிரமாக உலா வந்து கொண்டிருந்தன. அதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் மேடையில் பேசியதாவது, “சகாயம் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடப் போகிறாரா என்ற சந்தேகங்களும் கேள்விகளும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் சிறிதும் கவலைப்படவில்லை; அது எனக்கு ஒரு பிரச்சனையே அல்ல. நான் இங்கு மாணவர்களாகிய உங்களிடம் உரையாட வந்திருக்கிறேன்.
நான் என்றுமே யோசித்ததில்லை:
நான் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடுகிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல; மாறாக, டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று நேர்மையான அதிகாரிகளாக வருகிறீர்களா என்பதுதான் எனக்கு முதன்மையான விஷயம். என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்லது தோல்வியைப் பற்றி நான் என்றுமே யோசித்ததில்லை. ஒரு உண்மையான லட்சியவாதி தன் பதவியை இழந்தாலும், அவன் என்றென்றைக்குமே சமூகத்தின் பார்வையில் வெற்றியாளனாகத்தான் இருப்பான் என சகாயம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!
சமூகத்திற்குச் சேவையாற்றுங்கள்:
தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், TNPSC குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகளில் வெற்றி பெற திட்டமிட்ட உழைப்பும், விடாமுயற்சியும் அவசியம் எனக் குறிப்பிட்டார். அரசு நிர்வாகத்தில் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வர வேண்டுமானால், இளைஞர்கள் அதிக அளவில் ஆட்சிப் பணிகளுக்கும் அரசுப் பணிகளுக்கும் வர வேண்டும் என்றும், அவ்வாறு பொறுப்பேற்கும் போது எவ்வித சமரசமும் இன்றி மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.