கடலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு.. ஆன் ஸ்பாட்டில் லஞ்சம் பெற்ற ஊழியர் சஸ்பெண்ட்!
Cuddalore Govt Employee Suspended : கடலூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததால் சம்பந்தப்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவிட்டார் .
கடலூர் மாவட்டம், சிதம்பரம் கொத்தங்குடிதோப்பு பகுதியில் உள்ள அரசு நவீன அரிசி ஆலை, நகராட்சி அமுதம் பல்பொருள் அங்காடி, சேத்தியாதோப்பு எம். ஆர். கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை, நுகர்பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அலுவலகத்தில் உள்ள நெல் வருகை பதிவேடுகளை எடுத்து பார்வையிட்டார். அப்போது, அதில் இருந்த விவசாயின் தொலைபேசி எண்ணை எடுத்து அவரை தொடர்பு கொண்டார். அப்போது, நெல் மூட்டைகளுக்கு ஏதேனும் லஞ்சம் பெறப்படுகிறதா என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த விவசாயி நெல் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை லஞ்சம் வாங்குவதாக தெரிவித்தார்.
நெல் கொள்முதல் நிலைய ஊழியர் சஸ்பெண்ட்
இதில், லஞ்சம் கேட்டது உறுதியானதை தொடர்ந்து, மருவாய் கிராம அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய அரசு ஊழியர் வேல்முருகனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யுமாறு தன்னுடன் ஆய்வில் உடன் இருந்த மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இடம் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், நெல் கொள்முதல் நிலைய ஊழியர் வேல்முருகனை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் யாரேனும் லஞ்சம் பெற்று இருந்தால் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்யுமாறு ஆட்சியரிடம், அமைச்சர் வெங்கடரமணன் அறிவுறுத்தினார்.
மேலும் படிக்க: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கோவில்பட்டியில் இளைஞர் கைது.. மகளிர் போலீசார் நடவடிக்கை!




அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் புகாரளிக்க வேண்டும்
மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த விவசாயிகளிடம், அதிகாரிகளோ அல்லது ஊழியர்களோ லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்குமாறும், அந்த புகாரின் அடிப்படையில் உண்மை தன்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து, அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு
தமிழகத்தில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, குருவை சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், அனைத்து இடங்களிலும் நெல் கலன்கள் உள்ளதா. நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதா. எங்கெல்லாம் விவசாயிகளுக்கு தேவைப்படுகிறது என்பன குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: வீட்டு வேலை செய்யாததால் கண்டிப்பு.. மனமுடைந்த மாணவி விபரீத முடிவு.. ஈரோட்டில் சோகமான சம்பவம்!