வீட்டு வேலை செய்யாததால் கண்டிப்பு.. மனமுடைந்த மாணவி விபரீத முடிவு.. ஈரோட்டில் சோகமான சம்பவம்!
Erode College Student Self Harmed: ஈரோடு மாவட்டத்தில் வீட்டு வேலை பார்க்காததை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி வீட்டில் மின் விசிறிியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் குள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நீலாவதி. தம்பதிக்கு சஞ்சனா ( 21 வயது), சோனியா ( 19 வயது). ஆகிய இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சஞ்சனா ஈரோட்டில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். 2- ஆவது மகள் சோனியா தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி. எஸ். சி. 2- ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று பிற்பகல் சோனியாவை வீட்டு வேலைகளை பார்க்குமாறு அவரது தாய் நீலாவதி கூறியுள்ளார். ஆனால், அவர் எந்த வேலைகளையும் பார்க்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது தந்தை ராஜா மற்றும் தாய் நீலாவதி ஆகியோர் வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் இருக்கிறாயே என்று கண்டித்து உள்ளனர். இதில், பெற்றோர் திட்டியதால் மன வருத்தம் அடைந்த மாணவி சோனியா வீட்டின் அறைக்குள் சென்று கதவை உள் பக்கமாக பூட்டி கொண்டார்.
வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை
இதனால் பயந்து போன பெற்றோர் அறையின் கதவை தட்டியும் மாணவி திறக்கவில்லை. வெகு நேரமாகியும் திறக்காததால், சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் மின் விசிறியில் மாணவி சோனியா சேலையால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். உடனே, அவரை தூக்கில் இருந்து பொதுமக்கள் மீட்டனர். உடனே, மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் படிக்க: கோவையில் ரோந்துப் பணியில் அத்துமீறிய காவலர்.. இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அதிரடி கைது!




சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார்
அங்கு, மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மாணவியின் சடலம் பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மாணவியின் சடலத்தை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து, தந்தை ராஜா சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், வீட்டில் உள்ளவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். ஈரோட்டில் பெற்றோர் திட்டியதால் மனம் உடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணத்தை தவிர்க்க . . .
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)
மேலும் படிக்க: கரூரில் நள்ளிரவில் நுழைந்த தனிப்படை.. செந்தில் பாலாஜி நிழல் உலகப் புள்ளியின் பைனான்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைத்த போலீஸ்!!