AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் ரவுடிகள் வேட்டை.. காவலர்களை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ‘சரித்திரப் பதிவேடு’ ரவுடி சுட்டுப்பிடிப்பு!

Rowdy shot by police: சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யச் சென்ற தனிப்படை போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்ற பிரபல ரவுடி தமிழ் அழகு என்பவரைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதேபோல் திருவள்ளூரிலும் காவலரை அரிவாளால் வெட்டிய ரவுடி பூபாலன் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னையில் ரவுடிகள் வேட்டை.. காவலர்களை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ‘சரித்திரப் பதிவேடு’ ரவுடி சுட்டுப்பிடிப்பு!
ரவுடி சுட்டுப் பிடிப்பு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Jul 2026 08:17 AM IST

சென்னை, ஜூலை 19: தலைநகர் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டமான திருவள்ளூரில், குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற காவல் துறையினர் மீது ரவுடிகள் பயங்கர ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் தப்பியோட முயன்ற பிரபல ரவுடி ஒருவனைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த நிலையில், மற்றொரு சம்பவத்தில் ரவுடி வெட்டியதில் காவலர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இதையும் படிக்க: பெண்களின் பாதுகாப்பில் அதிரடி காட்டும் தமிழக அரசு.. 9,500-க்கும் மேற்பட்ட இடங்களில் சுழன்றடித்த சிங்கப்பெண் சிறப்புப் படை!

திருமுடிவாக்கத்தில் போலீஸ் என்கவுண்டர் அதிரடி:

சென்னை குன்றத்தூர் அருகே உள்ள திருமுடிவாக்கம் பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல சரித்திரப் பதிவேடு ரவுடியான ‘தமிழ் அழகு’ என்பவன் திருமுடிவாக்கம் பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

காவலர் மீது வெட்டுக்காயம்:

இதனையடுத்து, ரவுடி தமிழ் அழகு மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்யவும், அவனைக் கைது செய்யவும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற ரவுடி, தடுத்து நிறுத்த முயன்ற தலைமைக் காவலரின் கையில் தான் வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டினான். இதில் அந்தத் தலைமைக் காவலருக்குக் கடுமையான வெட்டுக்காயம் ஏற்பட்டது.

காலில் பாய்ந்த துப்பாக்கிக்குண்டு:

ரவுடி தப்பியோடினால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டும், தற்காப்புக்காகவும் தனிப்படை அதிகாரிகள் உடனடியாகத் தங்களின் துப்பாக்கியை எடுத்து ரவுடியை நோக்கிச் சுட்டனர். இதில் ரவுடி தமிழ் அழகின் வலது கணுக்காலில் குண்டு பாய்ந்தது.

துப்பாக்கிச் சூட்டில் நிலைகுலைந்து விழுந்த ரவுடியைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். காயமடைந்த ரவுடி சிகிச்சைக்காகத் தாம்பரம் அரசு பொது மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த தலைமைக் காவலருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூரில் காவலர் மீது ரவுடி அரிவாள் வெட்டு:

இதேபோன்றதொரு அதிர்ச்சிச் சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது. திருவள்ளூர் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேடு ரவுடியான பூபாலன் என்பவனைப் பிடிக்கக் காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.

அப்போது, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்த ரவுடி பூபாலன், தன்னை நோக்கி வந்த காவலர் வெங்கடேஷ் என்பவரைத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினான். இந்தத் திடீர் கொடூரத் தாக்குதலில் காவலர் வெங்கடேஷ் உடலில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அதற்குள் சக போலீசார் விரைந்து செயல்பட்டு ரவுடி பூபாலனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். படுகாயமடைந்த காவலர் வெங்கடேஷ் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி.. சிவகங்கையில் கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரிகள்!

காவல்துறை எச்சரிக்கை மற்றும் பதற்றம்:

குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும் இடங்களில் சட்டத்தை மதிக்காமல், காவலர்கள் மீதே ரவுடிகள் துணிச்சலாகப் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ள இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் தமிழகக் காவல்துறையினர் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் ரவுடிகள் மீது இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என உயர் காவல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து அந்தந்தப் பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us