AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டெல்லி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பரபரப்பு.. காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் கூட்டாக வெளிநடப்பு.. காரணம் என்ன?

All-Party Meeting Over Dissident Faction Call: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி குழுவினருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்ததைக் கண்டித்து காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் மற்றும் தமாகா எம்.பி.க்கள் கூட்டாக வெளிநடப்பு செய்துள்ளனர்.

டெல்லி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பரபரப்பு.. காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் கூட்டாக வெளிநடப்பு.. காரணம் என்ன?
மழைக்காலக் கூட்டத்தொடர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Jul 2026 12:59 PM IST

டெல்லி, ஜூலை 19: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி குழுவினரை மத்திய அரசு கூட்டத்திற்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டாக வெளிநடப்பு செய்துள்ளனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு முன்னிலையில் டெல்லியில் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.

இதையும் படிக்க: இந்திய விண்வெளித் துறையில் நிகழப்போகும் மாற்றம்.. 2030-ல் 45 பில்லியன் டாலராக உயரும் விண்வெளிப் பொருளாதாரம்!

மத்திய அரசின் கோரிக்கை:

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்கி, ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மழைக்காலக் கூட்டத்தொடரைச் சுமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள மசோதாக்கள் மீது அனைத்துக் கட்சியினரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளப் போதிய வாய்ப்புகளும், உரிய மரியாதையும் அளிக்கப்படும். நாடாளுமன்றம் சுமூகமாக நடந்தால் மட்டுமே மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும்” என்று கோரிக்கை விடுத்தார்.

கூட்டத்தில் வெடித்த சர்ச்சை:

மத்திய அரசு சுமூகமான கூட்டத்தொடருக்குக் கோரிக்கை விடுத்த அதே வேளையில், கூட்ட அரங்கிற்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி அணியினரின் வருகை பெரும் புயலைக் கிளப்பியது. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்தக் கட்சியிலிருந்து விலகி அதிருப்தி அணியாக ஒரு பிரிவினர் செயல்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் அழைப்பு:

ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வப் பிரிவாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத இந்த அதிருப்தி குழுவினருக்கும் மத்திய அரசு இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுத்திருந்தது. இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா தலைமையில் அக்கட்சியினர் கூட்ட அரங்கை விட்டு உடனடியாக வெளியேறினர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்தும் காங்கிரஸ், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.

உலகில் எங்குமே நடக்காத அவலம்:

வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரளாவைச் சேர்ந்த இடதுசாரி மாநிலங்களவை உறுப்பினர் பிரிட்டோ, மத்திய அரசை வன்மையாகச் சாடினார். “முறையாகப் பிரிந்து அங்கீகரிக்கப்படாத ஒரு கட்சியின் அதிருப்தி குழுவை, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பது என்பது மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகும். உலகில் எங்குமே நடைபெறாத ஒரு ஜனநாயக அவலம் இந்தியாவில் இன்று அரங்கேறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாங்கள் ஒட்டுமொத்தமாக இக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

கூட்டத்தொடரில் விறுவிறுப்பு கூடும்:

பொதுவாக நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் தொடங்கும் போதுதான் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது வழக்கம். ஆனால், அவை தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே எதிர்க்கட்சிகள் இணக்கமாக ஒன்றிணைந்து வெளிநடப்பு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புது ட்விஸ்ட்டாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: சென்னையில் ரவுடிகள் வேட்டை.. காவலர்களை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ‘சரித்திரப் பதிவேடு’ ரவுடி சுட்டுப்பிடிப்பு!

நாளை தொடங்கவுள்ள மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எவ்வளவு ஒற்றுமையாகவும், ஆக்ரோஷமாகவும் மத்திய அரசுக்குக் குடைச்சல் கொடுக்கப் போகிறார்கள் என்பதற்கான ஒரு வலுவான முன்னோட்டமாகவே இந்த வெளிநடப்பு சம்பவம் அமைந்துள்ளது.

Follow Us