இந்திய விண்வெளித் துறையில் நிகழப்போகும் மாற்றம்.. 2030-ல் 45 பில்லியன் டாலராக உயரும் விண்வெளிப் பொருளாதாரம்!
விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையமான IN-SPACe, ஒற்றைச் சாளர அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 2026 ஜூன் நிலவரப்படி, 4,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பதிவு செய்துள்ள IN-SPACe, 133 அங்கீகாரங்களை வழங்கியுள்ளது. மேலும், இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப்களில் 150 மில்லியன் டாலர் முதலீடுகளையும் எளிதாக்கியுள்ளது.
ஜூலை 18, 2026: இந்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால், நாட்டின் விண்வெளித் துறை வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ‘விக்ரம்-1’ ராக்கெட் ஏவுதலுக்குத் தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனங்களின் வளர்ச்சி இந்த சீர்திருத்தங்களின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்திய விண்வெளிக் கொள்கை 2023 மூலம், செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் சேவைகள், விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் பிற சேவைகள் என விண்வெளித் துறையின் முழுமையான மதிப்புச் சங்கிலியிலும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புதுமை, முதலீடு மற்றும் தொழில்முனைவு வேகமடைந்துள்ளது.
பன்மடங்கு உயரப்போகும் இந்திய விண்வெளி பொருளாதாரம்:
2014ஆம் ஆண்டில் ஒரே ஒரு விண்வெளி ஸ்டார்ட்அப் மட்டுமே இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது. தற்போது சுமார் 8.4 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ள இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம், 2030ஆம் ஆண்டில் 40 முதல் 45 பில்லியன் டாலராகவும், 2040ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலராகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையமான IN-SPACe, ஒற்றைச் சாளர அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 2026 ஜூன் நிலவரப்படி, 4,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பதிவு செய்துள்ள IN-SPACe, 133 அங்கீகாரங்களை வழங்கியுள்ளது. மேலும், இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப்களில் 150 மில்லியன் டாலர் முதலீடுகளையும் எளிதாக்கியுள்ளது.
மேலும் படிக்க: பிரதமர் மோடியின் ‘வந்தே மாதரம்’ செய்தியுடன் விண்ணில் பாயும் விக்ரம்-1 ராக்கெட்! சிறப்புகள் என்ன?
ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவாக ரூ. 1,000 கோடி துணிகர முதலீட்டு நிதி மற்றும் ரூ. 500 கோடி தொழில்நுட்ப ஏற்றுக்கொள்ளும் நிதி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு நிதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் சந்தை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
இந்தியாவின் வர்த்தக விண்வெளி விரிவுப்படுத்தும் முயற்சி:
இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL), இந்தியாவின் வர்த்தக விண்வெளி நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது. 2026 ஜூலை நிலவரப்படி, NSIL மொத்தம் 141 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
இதனிடையே, விக்ரம்-எஸ், அக்னிபான் உள்ளிட்ட தனியார் ராக்கெட் திட்டங்கள் இந்தியாவின் விண்வெளித் துறையில் புதிய மைல்கற்களை உருவாக்கியுள்ளன. செயற்கைக்கோள் தொழில்நுட்பம், பசுமை உந்துவிசை மற்றும் விண்வெளி சார்ந்த புதிய தொழில்நுட்பங்களிலும் இந்திய நிறுவனங்கள் முன்னேறி வருகின்றன.
இந்திய விண்வெளிக் கொள்கை, தளர்த்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் மற்றும் அரசு-தனியார் கூட்டாண்மை ஆகியவற்றின் மூலம், இந்தியா உலகளாவிய விண்வெளித் தொழில்நுட்ப மையமாக உருவெடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.