தமிழக இடைத்தேர்தல் தாமதம் ஏன்? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!
Tamil Nadu By Election: தமிழக இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த விளக்கத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் உட்பட முதல்வர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்த தொகுதிகள் என 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக இடைத்தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த 6 மாதம் கால அவகாசம் உள்ளது. தற்போது, இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு எதிராக கட்சிகள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதே போல, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் வெற்றிக்கு எதிராகவும் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதை கவனத்தில் கொண்டுள்ளோம். இந்த வழக்குகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகள்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால், இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிமுகவில் மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா, கரூர் தொகுதி எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேலும் படிக்க: திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்த அமைச்சர் ரமேஷ் – உற்சாக வரவேற்பு




இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என வழக்கு தாக்கல்
இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்க கூடாது என்றும், அவர்கள் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது எனவும் அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.
தமிழக இடைத்தேர்தல் தாமதம் ஏன்
இந்த நிலையில், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான், தமிழக இடைத்தேர்தல் அறிவிப்பு தாமதம் குறித்தும், எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்பது குறித்தும் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: உங்கள் தகவல் ரகசியமாக… மக்கள் தொகை கணக்கெடுப்பு – மக்களுக்கு முதல்வர் விஜய் கோரிக்கை