பழனி நில முறைகேடு வழக்கு.. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சார் பதிவாளர்.. நீதிமன்றம் விதித்த அதிரடி நிபந்தனை!
Palani Temple Land Case: திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி கோவில் நில முறைகேடு வழக்கில் சார்பதிவாளருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இருவருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், போலீசார் பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அவரில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை ( ஜூலை 17- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
பழனி அடிவார காவல் நிலையத்தில் கையெழுத்து
மேலும், இந்த நிலம் முறைகேடு வழக்கு தொடர்பாக பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என்று சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையின் போது சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் விடுமுறையில் இருந்த காரணத்தால் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை பொறுப்பு வகிக்கக்கூடியதாக தெரிவித்தனர். இந்த நிலம் பத்திரப்பதிவு வேறொரு சார்பதிவாளர் பதிவு செய்து கையெழுத்திட்டுள்ளார். ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்யவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: பழனி நில மோசடி வழக்கு.. சிசிடிவி காட்சிகளை முடக்கி சிபிசிஐடி தீவிர விசாரணை!!




ஜூலை 3- ஆம் தேதி ஆவண எண் ஒதுக்கீடு
இதனை கேட்ட நீதிபதிகள், ஆவண எண் ஒதுக்குவதை தவிர பிற நடவடிக்கைகள் முன்பு இருந்த சார் பதிவாளரால் கடந்த ஜூலை 3- ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முந்தைய பதிவாளர் விடுமுறையில் சென்ற காரணத்தினால் பொறுப்பு பதிவாளர் மீதமுள்ள பணிகளை முடித்துள்ளார் என்று நீதிபதி தெரிவித்தார். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இரு பக்கமும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார். இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.
பழனி கோயில் நில முறைகேடு பின்னணி
பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள 1.40 ஏக்கர் நிலத்தை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முருகதாஸ் என்பவர் ரூ. 2 கோடிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளதுரை மற்றும் பழனி பி. கே. என். புதுரை சேர்ந்த சேதுபதி ஆகியோருக்கு கடந்த ஜூலை 6- ஆம் தேதி பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இது குறித்து புகாரின்பேரில், பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ், சேதுபதி, வெள்ளதுரை ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்த அமைச்சர் ரமேஷ் – உற்சாக வரவேற்பு