மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தும் தாமதம்.. பட்ஜெட் தாக்கலை தள்ளிப்போடும் முதல்வர்.. என்ன காரணம்!
Puducherry Full Budget : புதுச்சேரி மாநிலத்தில் இந்த மாதம் முழு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்ஜெட் தாக்கல் தள்ளி போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், முதல் அமைச்சர் ரங்கசாமி முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து புதுச்சேரி மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், என். ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக என். ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட காரணத்தால் அப்போதைய அரசால் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை. இதற்கு பதிலாக 5 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக அரசு திட்டமிட்டு இருந்தது. இதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ரூ.14,300 கோடிக்கு ஒப்புதல் கோரி கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த கோப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது, அதன்படி விரைவில் புதுச்சேரி மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் தள்ளி போகிறது
இந்த நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்வது தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், 5 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட் காலம் நிறைவடைகிறது. இதனால், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை வெள்ளிக்கிழமை ஆடி மாதம் பிறப்பதன் காரணமாக சுப காரியங்கள் எதுவும் தொடங்குவதில்லை. இதில், முதல்வர் ரங்கசாமி நாள், நட்சத்திரம் பார்ப்பதில் தீவிர பற்று கொண்டவர் ஆவார். இதனால், ஆடி மாதம் முழுவதும் சட்டப்பேரவை கூடுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே பெறுகிறது.
மேலும் படிக்க: சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவி பறிப்பு – எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை..




சட்டவல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை
இதற்கு பதிலாக, ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஆவணி மாதம் பிறக்கிறது. அந்த காலகட்டத்தில் சட்டசபை கூட வாய்ப்பு இருப்பதாகவும், அப்போது, தற்காலிக சபாநாயகர் அன்பழகனை வைத்தே சட்டப்பேரவையே நடத்தவும் முதல்வர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும், இது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதில், புதிய சட்டப்பேரவை தலைவர் நியமிக்கும் வரை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பதவியில் நீடிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு மேல் பட்ஜெட் தாக்கல்
இதனால், ஆகஸ்ட் மாதம் 18- ஆம் தேதிக்கு பின்னரே புதுச்சேரி சட்டப்பேரவை கூடும் என்றும், அப்போதே முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றே தெரிகிறது. புதுச்சேரியில் தற்போது வரை அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அனைத்து துறைகளையும் முதல்வர் ரங்கசாமி தன் வசமே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: விஜயபாஸ்கர்களுக்கு சிக்கல்.. சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக வழக்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!