திருமணமான 5 மாதத்தில் விபரீதம்.. தூக்கில் பிணமாக தொங்கிய மருத்துவ மாணவி.. மதுரை போலீசார் தீவிர விசாரணை!
Madurai Medical Student Self harm : கோவையை சேரந்த மருத்துவ மாணவி மதுரையில் முதுகலை மருத்துவம் படித்து வரும் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தல்லாக்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், ஆர். எஸ். புரம் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா ( 24 வயது). இவர், எம்பிபிஎஸ் படித்துள்ள நிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்தார். இதற்காக, கலெக்டர் அலுவலக சாலையில் அமைந்துள்ள கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து படிப்பை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், லாவண்யாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால், திருமணம் நடைபெற்றால் தனது முதுகலை மருத்துவ படிப்புக்கு இடையூறு ஏற்படும் என்றும், இதனால், திருமணம் வேண்டாம் என்று லாவண்யா கூறி வந்ததாக தெரிகிறது. அதற்கு, அவரது பெற்றோர் மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம், திருமணத்தால் படிப்பு கெடாது என்று ஆறுதல் தெரிவித்துள்ளனர். இதில், லாவண்யாவுக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிகிறது. இதை மீறி லாவண்யாவுக்கு அவரது பெற்றோர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது.
கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி
இந்த நிலையில், கடந்த வாரம் மதுரையில் இருந்து அது சொந்த ஊரான கோவைக்கு லாவண்யா சென்று விட்டு 13- ஆம் தேதி மீண்டும் கல்லூரி விடுதிக்கு திரும்பினார். அங்கு, யாரிடமும் சரியாக பேசவில்லை என்று தெரிகிறது. பின்னர், இரவு உணவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு லாவண்யா தூங்க சென்றுள்ளார். காலையில் வெகுநேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள் கல்லூரி விடுதி காவலாளிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, லாவண்யா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
மேலும் படிக்க: தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா?.. குதிரை பேர வழக்கு சிபிஐக்கு மாறுமா?.. தீர்ப்பை தள்ளி வைத்த உயர் நீதிமன்றம்!




தல்லாக்குளம் போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மருத்துவர் லாவண்யாவின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினையை காரணம் என்று தெரியவந்தது. இதில், திருமணத்தால் மருத்துவ படிப்பில் இடையூறு ஏற்படும் என்று மன குழப்பத்தில் இருந்து வந்த லாவண்யா தனது கணவரிடம் இது தொடர்பாக பேசியுள்ளார்.
கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு
இதில், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனிடையே, உறவினர்களின் இல்ல நிகழ்ச்சி, விருந்து நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு லாவண்யா சென்று வந்ததால் அவரது படிப்பின் கவனம் சிதறியதாகவும், இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் திருமணமான 5 மாதங்களில் தற்கொலை சம்பவம் நிகழ்ந்ததால் வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: உணவு கொடுக்காததால் ஆத்திரம்.. குத்தூசியால் மனைவியை குத்தி கொன்ற கணவர்.. திருச்சியில் கொடூரம்!
தற்கொலை எண்ணத்தை தவிர்க்க
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)