உணவு கொடுக்காததால் ஆத்திரம்.. குத்தூசியால் மனைவியை குத்தி கொன்ற கணவர்.. திருச்சியில் கொடூரம்!
Trichy Murder : திருச்சியில் உணவு கொடுக்காத ஆத்திரத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை வாகனங்களுக்கு பஞ்சர் ஓட்டும் குத்தூசியால் கொடூரமாக குத்தி அவரது கணவர் கொலை செய்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சையையும், பர பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .
திருச்சி மாவட்டம், தீரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் என்ற மூர்த்தி ( 40 வயது). மனைவி கவிதா ( 36 வயது). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சம்பத்குமார் மிளகுபாறை பகுதியில் செயல்பட்டு வரும் பீடா கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி கவிதா மதிய உணவு கொண்டு சென்று கொடுப்பது வழக்கமாகும். இந்த நிலையில், சம்பவத்தன்று மதியம் கவிதா வீட்டில் இருந்து சம்பத்குமாருக்கு உணவு கொண்டு செல்லவில்லை. இது தொடர்பாக சம்பத்குமாருக்கும் எந்த தகவலையும் கவிதா தெரிவிக்கவில்லை. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த சம்பத்குமார் கடையில் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் மேலும் கோபம் அடைந்த சம்பத்குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
வீட்டில் மனைவியை கம்பியால் குத்திய கணவர்
அப்போது, வீட்டின் உள்ளே இருந்த கவிதாவை கடுமையாக தாக்கி அங்கு கிடந்த கம்பியால் அவரை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர், சிறிது நேரம் கழித்து தனது மாமியாரை செல்போனில் தொடர்பு கொண்டு கவிதாவை கம்பியால் குத்தி விட்டதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் கவிதாவை வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த கவிதாவை மீட்டு உறையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். இங்கு கவிதா சிகிச்சை பெற்று வருவதை அறிந்த சம்பத்குமார் சம்பவத்தன்று இரவு மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்.
மேலும் படிக்க: கள்ளக்காதலனுடன் சேர கணவனைக் கொன்ற ஆந்திரப் பெண்.. தமிழக வாலிபர் பிணமாக மீட்பு.. கோவிலுக்கு சென்ற இடத்தில் பயங்கரம்!!




குத்தூசியால் குத்தி கொன்ற கணவர்
அங்கு, கவிதாவிடம் நீ இன்னும் சாகவில்லையா. உயிரோடுதான் இருக்கியா.. என்று ஆவேசமாக பேசிய சம்பத்குமார் பஞ்சர் ஒட்டுவதற்கு பயன்படுத்தும் குத்தூசியால் கவிதாவின் வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில், பலத்த காயமடைந்த கவிதா மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அப்போது இவரது சத்தம் கேட்டு வந்த மருத்துவமனை ஊழியர்கள் கவிதா ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
இது தொடர்பாக, உறையூர் காவல் நிலையத்திற்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவிதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா?.. குதிரை பேர வழக்கு சிபிஐக்கு மாறுமா?.. தீர்ப்பை தள்ளி வைத்த உயர் நீதிமன்றம்!