கள்ளக்காதலனுடன் சேர கணவனைக் கொன்ற ஆந்திரப் பெண்.. தமிழக வாலிபர் பிணமாக மீட்பு.. கோவிலுக்கு சென்ற இடத்தில் பயங்கரம்!!
Kuppam Temple Murder: கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரமேஷ் என்ற தமிழக வாலிபர், ஆந்திர மாநிலம் குப்பம் மல்லப்பகொண்டா மலைக்கோவிலுக்குச் சென்ற இடத்தில் அவரது மனைவியின் கள்ளக்காதலன் கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலனுடன் தப்பிச் செல்ல மனைவி காசினி போட்ட திட்டத்தின் படி இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
சித்தூர், ஜூலை 16: ஆந்திர பிரதேசம் மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மல்லப்பகொண்டா மலைக்கோவிலுக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கில், அந்த வாலிபரின் மனைவியே இந்த கொடூரக் கொலையைத் திட்டமிட்டு அரங்கேற்றியது காவல் துறையினரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் படிக்க: தூத்துக்குடியில் தொழிலாளி கொடூர கொலை வழக்கு.. தலைமறைவான 5 பேரை சுற்றி வளைத்த போலீசார்.. பரபரப்பு பின்னணி!
வழக்கின் பின்னணி:
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (24) என்பவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் மண்டலத்தைச் சேர்ந்த ஹாசினி என்பருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த ஜூலை 13ஆம் தேதி இரவு, ரமேஷ் தனது மனைவி காசினியின் சொந்த ஊரான சாந்திபுரம் அடுத்த போயனப்பள்ளி கிராமத்திற்குத் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர், ஆந்திரா-தமிழக எல்லையிலுள்ள குப்பம் நகரின் ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவபெருமானின் ‘மல்லப்பகொண்டா’ மலைக்கோவிலுக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
காட்டுக்குள் நடந்த கொடூரக் கொலை:
கடந்த ஜூலை 14 (செவ்வாய்க்கிழமை) அன்று ரமேஷ், அவரது மனைவி மற்றும் ஒரு வயதுக் குழந்தையுடன் மலைக்கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர்கள் மலைப்பாதையின் வளைவுகளில் சென்றுகொண்டிருந்த போது, காசினியின் 22 வயது கள்ளக்காதலன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட கும்பல் இவர்களை வழிமறித்துள்ளது. அவர்கள் ரமேஷை சாலையோரத்திலிருந்து வலுக்கட்டாயமாகக் காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்று, மிகக் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு ரமேஷின் மனைவி ஹாசினி மற்றும் அவரது குழந்தையும் மாயமாகினர்.
விசாரணையை முடுக்கிய சிசிடிவி காட்சிகள்:
செவ்வாய்க்கிழமை இரவு நீண்ட நேரமாகியும் ரமேஷ் குடும்பத்தினர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், குப்பம் போலீசாருக்குத் தகவல் கொடுத்துத் தேடத் தொடங்கினர். இதற்கிடையே, புதன்கிழமை காலையில் மலைக்கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் சிலர், காட்டுப் பாதையில் வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, அது ரமேஷ் தான் என்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து போலீசார் மலை அடிவாரத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கணவர் கொலை செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, மனைவி ஹாசினி தனது ஒரு வயதுக் குழந்தையுடன் கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பர்களின் பைக்கில் ஏறி எவ்வித பயமும் இன்றி தப்பிச் செல்லும் அதிர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகியிருந்தன.
மேலும் படிக்க: இரு கார்கள் நேருக்கு நேர் மோதல்.. குறுக்கே சென்ற மாமியார்- மருமகள் நேர்ந்த துயரம்.. புதுக்கோட்டையில் பெருஞ்சோகம்!
காவல்துறை நடவடிக்கை:
கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழவே ரமேஷை ஹாசினி சினிமா பாணியில் திட்டமிட்டு வரவழைத்துக் கொலை செய்தது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது. இந்த கொடூரக் கொலை வழக்கு தொடர்பாகத் தலைமறைவாக உள்ள காசினி மற்றும் அவரது கள்ளக்காதலனைப் பிடிக்க குப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தப்பியோடிய கும்பலுக்கு உதவியாக இருந்த சில சந்தேகத்திற்குரிய நபர்களைப் போலீசார் தற்போது பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.