பாலில் கலப்படமா? வீட்டிலேயே கண்டறியும் 5 நொடி மேஜிக் சோதனை
Simple DIY Home Tests: இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் (FSSAI) அதிரடி ஆய்வில் சந்தையில் விற்கப்படும் 70 சதவீத பால் மாதிரிகளில் ஆபத்தான ரசாயனங்கள் மற்றும் தண்ணீர் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நச்சு கலந்த பாலைத் தொடர்ந்து உட்கொள்வதால் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் செரிமான மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மக்களின் அன்றாட உணவில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் ஊட்டச்சத்திற்கு இது இன்றியமையாதது. ஆனால், சமீபத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய நாடு தழுவிய ஆய்வில், சந்தையில் விற்கப்படும் சுமார் 70 சதவீத பால் மாதிரிகள் தரக் கட்டுப்பாட்டு சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாலின் அடர்த்தியை அதிகரிக்கவும், லாபம் ஈட்டவும் தண்ணீர், சோப்புத்தூள், ஸ்டார்ச் (கஞ்சிப்பசை), யூரியா போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய கலப்படப் பாலைத் தொடர்ந்து குடிப்பதால் வயிறு உபாதைகள், கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே, நாம் வாங்கும் பால் சுத்தமானதுதானா என்பதை வீட்டிலேயே கண்டறியும் எளிய வழிமுறைகள் இதோ:
தண்ணீர் கலப்படத்தைக் கண்டறியும் சோதனை
பாலில் பொதுவாகச் செய்யப்படும் கலப்படம் தண்ணீர் சேர்ப்பதுதான். இதனைச் சோதிக்க, வழுவழுப்பான ஒரு சாய்வான மேற்பரப்பில் (மார்பிள் அல்லது தட்டு) ஒரு துளி பாலை விடுங்கள். சுத்தமான பாலாக இருந்தால், அது மெதுவாக நகர்ந்து, அதன் பாதையில் வெள்ளை நிறக் கோட்டை அல்லது தடத்தை விட்டுச் செல்லும். அதுவே தண்ணீர் கலந்த பாலாக இருந்தால், எந்தவித அடையாளமும் இல்லாமல் மிக வேகமாக வழிந்தோடிவிடும்.
ஸ்டார்ச் (கஞ்சிப்பசை) இருப்பதை உறுதி செய்தல்
பாலின் அளவையும், அடர்த்தியையும் செயற்கையாக அதிகரிக்க ஸ்டார்ச் சேர்க்கப்படுகிறது. இதனால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பாலை எடுத்துக்கொண்டு, அதனுடன் சில துளிகள் அயோடின் கரைசலை (Iodine solution) சேர்க்க வேண்டும். பால் நீல நிறமாக மாறினால், அதில் ஸ்டார்ச் கலக்கப்பக்கப்பட்டு உள்ளது என்பதை அறியலாம். நிறம் மாறவில்லை எனில் அது பாதுகாப்பானதாகும்.
சோப்புத்தூள் (டிடெர்ஜென்ட்) கலப்பு சோதனை
பாலின் வெண்மை நிறத்தையும், நுரைத் தன்மையையும் அதிகரிக்க சலவை மாவு அல்லது சோப்புத்தூள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கண்ணாடிக் குவளையில் 5 முதல் 10 மில்லி பாலை எடுத்துக்கொண்டு, அதே அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் குலுக்க வேண்டும். பாலில் சோப்புத்தூள் கலந்திருந்தால், அதன் மேல் பகுதியில் அடர்த்தியான, நீண்ட நேரம் கரையாத நுரை உருவாகும். சுத்தமான பாலில் வரும் குமிழ்கள் உடனே மறைந்துவிடும்.
செயற்கை பால் (Synthetic Milk) கண்டறிதல்
ரசாயனங்கள், சோப்பு மற்றும் சுண்ணாம்பு கொண்டு தயாரிக்கப்படும் செயற்கை பால் உடலுக்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இதனை மூன்று வழிகளில் கண்டறியலாம். முதன்மையாக, பாலை லேசாக சூடாக்கும்போது சோப்பு போன்ற கடுமையான வாசனை வரும் (சுத்தமான பால் இனிமையான மணம் கொண்டது). இரண்டாவதாக, இதன் சுவை லேசான கசப்பு அல்லது சோப்புத் தன்மையுடன் இருக்கும். இறுதியாக, இந்தச் செயற்கை பாலைக் காய்ச்சும்போது அது வழக்கத்திற்கு மாறாக அதிக அடர்த்தியாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ மாறும்.
Also Read: ஒரு வயதுக்கு முன் குழந்தைகளுக்கு ஏன் பசும்பால் கொடுக்கக் கூடாது?
யூரியா கலப்படத்தை அறிவது எப்படி?
பாலின் கொழுப்புச் சத்தை (Fat content) போலியாகக் காட்ட யூரியா சேர்க்கப்படுகிறது. இது சிறுநீரகத்தை கடுமையாகப் பாதிக்கும். ஒரு சோதனைக் குழாயில் 5 மில்லி பாலை எடுத்துக்கொண்டு, அதில் லிட்மஸ் தாளை (Litmus paper) பாதியளவு நனைக்க வேண்டும். பாலில் யூரியா கலந்திருந்தால், அந்த லிட்மஸ் தாளோ அல்லது பாலோ நீல நிறமாக மாறும். தூய்மையான பாலில் எவ்வித நிற மாற்றமும் ஏற்படாது.