நாகர்கோவில் சிறை மரணம்.. 19 இடங்களில் காயம், ஊனமுற்ற கையும் உடைப்பு.. நீதி கேட்டு நிற்கும் உறவினர்கள்!!
Nagercoil Custodial Death: நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அவரது உடலில் 19 இடங்களில் கடுமையான காயங்கள் இருப்பது உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஊனமுற்ற கையை உடைத்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாகர்கோவில், ஜூலை 16: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் மரணமடைந்த விவகாரத்தில், அவரது உடலில் 19 இடங்களில் கடுமையான காயங்கள் இருப்பது உடற்கூராய்வு அறிக்கையில் வெளிவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நீதிகேட்டு தொடர்ந்து 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊனமுற்ற கையை உடைத்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டி, குற்றவாளிகளை ஊடகங்களில் காட்டும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராடி வரும் நிலையில், ஒரு தலைமை வார்டன் உட்பட 3 சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: லஞ்சப் புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. 14 நாட்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு!!
வழக்கின் பின்னணி:
தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, சபரிவர்மன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிறையில் இருந்த சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
உடற்கூராய்வு அறிக்கையில் அதிர்ச்சி:
சபரிவர்மனின் உடற்கூராய்வு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவரது உடலின் பல்வேறு பகுதிகளில் 19 இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர் தரப்பில் கூறுகையில், சபரிவர்மனுக்கு ஏற்கனவே வலது கை ஊனமுற்ற நிலையில் இருந்தது. அந்த ஊனமுற்ற கையின் முழங்கை (Elbow) மற்றும் மணிக்கட்டுப் பகுதிகளில் 3 இடங்களில் எலும்பு முறிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் வலது நெஞ்சுப் பகுதிக்குக் கீழே காயங்களும், தலையில் பலத்த அடிபட்டு ரத்தக் கட்டுகளும் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி, அவரது இரு கால்களின் முட்டிப் பகுதிகளையும் உடைத்துள்ளனர் என மெடிக்கல் ரிப்போர்ட்டைச் சுட்டிக்காட்டி அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
உறவினர்களின் குற்றச்சாட்டுகள்:
சபரிவர்மனின் மரணத்திற்கு நீதி கேட்டு மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் போராடி வருகின்றனர். உயிரிழந்த இளைஞரின் அக்காள் கண்ணீர் மல்கக் கூறுகையில், “விசாரணை என்ற பெயரில் போலீசார் எங்களை ஏமாற்றி வருகின்றனர். எங்கள் வீட்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தை மற்றும் தாயார் மட்டுமே உள்ளனர். இந்தச் சூழலில் கிராம நிர்வாக அதிகாரி (VAO) மூலம் எங்களை ஏமாற்றி உடலை வாங்க வைக்கப் போலீசார் சதி செய்கிறார்கள்.
என் தம்பியைக் கொன்ற கொலைகார அதிகாரிகளைக் கைது செய்து, அவர்கள் யார் என்பதை அனைத்து ஊடகங்களிலும் காட்டும் வரை தம்பியின் உடலை வாங்க மாட்டோம்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், சபரிவர்மனின் குடும்பத்திற்குப் போதிய வாழ்வாதாரமும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க: பழனி நில மோசடி விவகாரம்.. யார் அந்த பவர் சென்டர்?.. CBI விசாரணை கோரி முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் சரமாரி கேள்வி..
மூன்று சிறைக் காவலர்கள் கைது:
இந்தக் கொடூரச் சிறை மரண விவகாரத்தில், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஒரு தலைமை வார்டன் மற்றும் இரண்டு வார்டன்கள் (சிறைக் காவலர்கள்) தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். “இனி ஒருபோதும் யாருக்கும் இதுபோன்ற கொடூரம் சிறையில் நடக்கக் கூடாது; குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருவதால் நாகர்கோவிலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.