விசாரணைக் கைதி மரணம் – சக கைதிகள் 8 பேர் மீது வழக்கு – என்ன நடந்தது?
நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில் அவரை தாக்கியதாக சக கைதிகள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறைத்துறை தலைமை வார்டன் ஜெகன் உட்பட 3 காவலர்களை நேசமணி நகர் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில், ஜூலை 15 : நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில் அவரை தாக்கியதாக சக கைதிகள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குட்கா வழக்கில் கைதான சபரி வர்மன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அவர் மரணமடைந்தார். இந்த நிலையில் அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்ட்டனர். இந்த நிலையில் அவருக்கு ஜூலை 14, 2026 நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலில் 19 இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூராய்வில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில் சக கைதிகள் 8 பேர் மீது வழக்கு
இந்த வழக்கில் சிறைத்துறை தலைமை வார்டன் ஜெகன் உட்பட 3 காவலர்களை நேசமணி நகர் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிலையில் சபரிவர்மன் காவலில் வைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்த சக கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன் உள்ளிட்ட 8 கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம்?விசாரணையைத் தொடங்கிய அமலாக்கத்துறை – சிக்கும் முக்கிய தலைகள்?




இதற்கிடையில் சபரிவர்மன் இறந்ததற்கு தெற்கு தாமரைக்குளம் காவல்நிலைய காவல்துறை துணை ஆணையர் தான் காரணம் எனவும் காவல்துறையினர் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அவரது உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சிறையின் தலைமை வார்டன் ஜெகன், சிறை வார்டன் சிவக்குமார், மற்றொரு வார்டன் சுரேஷ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ததாகக் கூறி சபரிவர்மன் என்பவரை தென்தாமரைக்குளம் போலீசார் கடந்த ஜூலை 9, 2026 அன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ததப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.
இதையும் படிக்க : தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு? மருத்துவர்கள் மீது பாயும் நடவடிக்கை
இந்நிலையில், கடந்த ஜூலை 13, 2026 திங்கள்கிழமை காலை சபரிவர்மன் திடீரென உயிரிழந்துவிட்டதாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், சபரிவர்மனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.