சாத்தான்குளம் பாணி கொடூரம்?.. நாகர்கோவில் சிறைக்கைதி மரண வழக்கு.. உடற்கூராய்வில் அதிர்ச்சி.. 3 காவலர்கள் கைது!!
நாகர்கோவில் கிளைச்சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கில், அவரது உடலில் 19 காயங்கள் இருப்பது உடற்கூராய்வில் அம்பலமானது. இந்தச் சாத்தான்குளம் பாணி கொடூர வன்முறை தொடர்பாக, சிறைத்துறை தலைமை வார்டன் ஜெகன் உட்பட 3 காவலர்களை நேசமணி நகர் போலீசார் அதிரடியாகக் கைது செய்து, கொலை வழக்காக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாகர்கோவில், ஜூலை 15: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச்சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் மரணமடைந்த விவகாரத்தில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது நீதிபதி முன்னிலையில் நடந்த பிரேத பரிசோதனையில் அம்பலமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறை வார்டன்கள் 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். குறிப்பாக, அவரது உடற்கூராய்வு அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம்.. த.வெ.க நிர்வாகி என்றால் ஒரு சட்டம் – மாற்றுத்திறனாளி காவல் மரணத்தில் உதயநிதி கேள்வி..
வழக்கின் பின்னணி:
குட்கா விற்பனை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சபரிவர்மன் என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று அவர் சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். சபரிவர்மனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கடந்த இரண்டு நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் கண்டனங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
உடற்கூராய்வு அறிக்கையில் அதிர்ச்சி:
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகாரைத் தொடர்ந்து, நாகர்கோவில் குற்றவியல் முதன்மை நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் சபரிவர்மனின் உடற்கூராய்வு நடைபெற்றது. சிறைத்துறை அதிகாரிகளிடம் நீதிபதி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினார். அதன் முடிவில் வெளியான ஆய்வறிக்கை, சிறைக்குள் நடந்த கொடூரமான வன்முறையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. சபரிவர்மனின் உடலில் மொத்தம் 19 இடங்களில் பலத்த காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கட்டி வைத்து கொடூர தாக்குதல்:
சபரிவர்மனின் வலது கையில் மட்டும் 6 இடங்களில் காயங்கள் இருப்பதோடு, எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் வலது மற்றும் இடது கால்களின் மூட்டுப் பகுதிகளிலும் கடுமையான காயங்கள் உள்ளன. இடது நெஞ்சின் கீழ் பகுதியில் 7 சென்டிமீட்டர் அளவில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. தலையில் இரண்டு இடங்களிலும், பின்னங்கழுத்து மற்றும் பின்னந்தலைப் பகுதியிலும் பலத்த காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சபரிவர்மனின் கை, கால்களைக் கட்டிப்போட்டு கொடூரமாகத் தாக்கியதற்கான அடையாளங்கள் உடலில் தெளிவாகக் காணப்படுவதாக அறிக்கை தெரிவிக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சபரிவர்மனின் மனைவி, சாத்தான்குளம் காவல் நிலைய வன்முறைச் சம்பவத்தைப் போல தன் கணவரையும் திட்டமிட்டு அடித்தே கொன்றுவிட்டதாகக் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறைக் காவலர்கள் 3 பேர் அதிரடி கைது
நீதிபதியின் இந்த அதிரடி விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து, காவல்துறையினர் தங்களது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினர். குற்றச்சாட்டுக்கு உள்ளான நாகர்கோவில் சிறைத்துறைத் தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவிடைநம்பி ஆகிய மூன்று பேரையும் நேசமணி நகர் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கொலை வழக்காக மாறுகிறது:
இச்சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக ‘சந்தேக மரணம்’ என்ற பிரிவின் கீழ் நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்போது காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் நீதிபதி விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கு “கொலை வழக்காக” மாற்றப்பட உள்ளதாகத் நம்பத்தகுந்த காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்டுள்ள மூன்று சிறைக் காவலர்களிடமும் நேசமணி நகர் காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட எஸ்பி நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிக்க: அதிமுக எம்.எல்.ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி.. திமுக – அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சிறையில் உள்ள வேறு கைதிகளுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் சிறைத்துறையின் பாதுகாப்பு மற்றும் விசாரணை கைதிகளின் மனித உரிமைகள் குறித்த பெரும் விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.