2031க்குள் 20 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் – தமிழக அரசு எடுக்கும் புதிய முயற்சி..
மாநிலம் முழுவதும் பொது மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு விரைவாக விரிவுபெற்று, 2031-ஆம் ஆண்டிற்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் தமிழ்நாடு அரசின் இலக்கை எட்ட வழிவகுக்கும். மேலும், குறைந்த கார்பன் வெளியேற்றம் கொண்ட போக்குவரத்து மற்றும் சுத்தமான எரிசக்தி பயன்பாட்டில் தமிழ்நாட்டை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்றவும் இந்த நடவடிக்கைகள் உறுதுணையாக அமையும்
ஜூலை 14, 2026: தமிழ்நாடு அரசின் “வெற்றி தமிழகம்” தொலைநோக்குப் பார்வையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக, 2031-ஆம் ஆண்டிற்குள் மாநிலம் முழுவதும் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைப்பதை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு கொள்கை சார்ந்த முன்னெடுப்புகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரித்தல், தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல், ஆரம்ப முதலீட்டு தடைகளை குறைத்தல் மற்றும் உலகத் தரத்திலான மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், நிலையான போக்குவரத்துத் துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.
இதனை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களின் தற்போதைய நிலையை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சி:
அதன் தொடர்ச்சியாக, தலைமைச் செயலாளர் வழங்கிய அறிவுறுத்தலின்படி, 14.07.2026 அன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையில், ITDP India மற்றும் Guidance Tamil Nadu அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் உயர்மட்ட தொழில்நுட்பக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாநிலத்தில் மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
தற்போதுள்ள உயரழுத்த/அதி உயரழுத்த மின் இணைப்புகளின் அனுமதிக்கப்பட்ட மின் சுமை வரம்பிற்குள் அமைக்கப்படும் மின்சார வாகன சார்ஜிங் வசதிகளுக்கு, தனி EV துணை மின்மீட்டர் அமைக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனி மின் இணைப்பு வேண்டாம்:
மேலும், நிலைக்கட்டணம் அல்லது குறைந்தபட்ச மாதாந்திர கட்டணம் விதிக்கப்படாது. மின்சார வாகனங்களுக்கான மின் கட்டணப் பிரிவின் கீழ், மின்பயன்பாட்டிற்கான யூனிட் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும்.
இந்த நடைமுறையால் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், கூடுதல் மின் உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமின்றி, குறைந்த முதலீட்டில் விரைவாக மின்சார வாகன சார்ஜிங் வசதிகளை அமைக்க முடியும்.
மேலும் படிக்க: இந்தியாவிலேயே அதிக வெப்பம்.. மதுரையில் 42.5 டிகிரி செல்சியஸ் வெயில்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை..
தற்போதுள்ள நுகர்வோரின் மின் சுமை மற்றும் கட்டணப் பிரிவை பாதிக்காமல், தேவைக்கேற்ப மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பிற்காக தனியாக புதிய மின் சேவை இணைப்பைப் பெறவும் அனுமதி வழங்கப்படும்.
கட்டணச் சலுகைகள் என்னென்ன?
மாநிலத்தில் மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு முதலீடுகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை – 2023-ல் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்கும் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான தனித்துவமான மின் கட்டணப் பிரிவில் தற்போது நடைமுறையில் உள்ள நிலைக்கட்டணம்/குறைந்தபட்ச மாதாந்திர கட்டணத்தை நீக்கவோ அல்லது கணிசமாகக் குறைக்கவோ அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்:
இந்த முக்கிய நடவடிக்கைகள் மூலம், மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட தடைகள் பெருமளவில் குறையும். இதனால் தனியார் முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பு அதிகரிக்கும்.
இதன் மூலம், மாநிலம் முழுவதும் பொது மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு விரைவாக விரிவுபெற்று, 2031-ஆம் ஆண்டிற்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் தமிழ்நாடு அரசின் இலக்கை எட்ட வழிவகுக்கும்.
மேலும், குறைந்த கார்பன் வெளியேற்றம் கொண்ட போக்குவரத்து மற்றும் சுத்தமான எரிசக்தி பயன்பாட்டில் தமிழ்நாட்டை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்றவும் இந்த நடவடிக்கைகள் உறுதுணையாக அமையும்.