காலையில் துள்ளி குதித்து பள்ளி சென்ற மாணவன்.. மாலையில் பிணமாக வீடு திரும்பினார்.. கள்ளக்குறிச்சியில் சோகமான நிகழ்வு!
Kallakurichi Student Died: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் அரசுப் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த மர்மமான மரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் புவின்குமார் ( 13 வயது). இவர், அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவன் வழக்கம் போல இன்று வியாழக்கிழமை ( ஜூலை 16- ஆம் தேதி) பள்ளிக்கு சென்றார். அப்போது, மதிய உணவு இடைவேளையின் போது, மாணவர் புவின்குமார் உணவு அருந்திவிட்டு சக மாணவர்களுடன் பள்ளியின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மாணவன் புவின் குமார் நிலை தடுமாறி தரையில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் சத்தம் போட்டனர். அந்த சத்தம் கேட்டு ஆசிரியர்கள் மாணவரை பார்த்தபோது மயங்கி விழுந்து கிடந்தார். உடனே, அந்த மாணவரை வைத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்த மாணவன்
அங்கு, அந்த மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுய நினைவில் இல்லை, எனவே, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், அந்த மாணவன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, மாணவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, மாணவரின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.
மேலும் படிக்க: உணவு கொடுக்காததால் ஆத்திரம்.. குத்தூசியால் மனைவியை குத்தி கொன்ற கணவர்.. திருச்சியில் கொடூரம்!




சங்கராபுரம் போலீசார் விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சை உலுக்கும் வகையில் இருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மாணவரின் பெற்றோர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவன் மாரடைப்பால் உயிரிழந்தாரா
இதில், மாணவன் விளையாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் உடல்நல குறைபாடு காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர். வழக்கம் போல காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற மாணவன் திடீரென பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: திருமணமான 5 மாதத்தில் விபரீதம்.. தூக்கில் பிணமாக தொங்கிய மருத்துவ மாணவி.. மதுரை போலீசார் தீவிர விசாரணை!