பழனி முருகன் கோயில் நில முறைகேடு.. அதிரடி விசாரணைக்கு 3 பேர் கொண்ட குழு அமைப்பு!
Palani Land Irregularities Inquiry Committee : பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. பழனி மலை அடிவாரத்தில் முருகன் கோவிலுக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இருவருக்கு, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்திருந்தார். இது தொடர்பாக, கோவில் நிர்வாகம் தரப்பில் பழனி மலை அடிவார காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கோவில் நில முறைகேடு தொடர்பாக 3 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
3 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு
இந்த குழுவில் கூடுதல் பதிவு தலைவர், உதவி பதவு தலைவர், மாவட்ட பதிவாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவானது பத்திரப்பதிவு நடைபெற்ற பழனி சார்- பதிவாளர் அலுவலக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முறைகேடு தொடர்பாக முழுமையான விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகன் கோவிலுக்கு சொந்தமான இந்த நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் ஆகியோர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க: பழனி கோயில் ரூ.100 கோடி நில முறைகேடு.. விசாரணையை கையில் எடுத்த சிபிசிஐடி.. சிக்கப் போவது யார்?




சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடக்கம்
இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் நடைபெற்ற நிலையில், பத்திரப்பதிவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, இந்த முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றுமாறு பழனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழக டிஜிபி அசோக் குமார் அகர்வாலுக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், பழனி முருகன் கோவில் நில முறைகேடு பத்திரப்பதிவு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
நில முறைகேட்டில் சிக்கும் முக்கிய புள்ளிகள்
அதன் அடிப்படையில், சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், நிலம் முறைகேடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் அரசியல் செல்வாக்கு உடைய முக்கிய புள்ளிகள் கைதாகுவார்கள் என்று பரவலாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பழனி கோவில் ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கு.. அதிரடி விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி!