சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு.. வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்.. என்ன காரணம்!
Sivaganga Ajith Kumar Custodial Death Case : சிவகங்கை மாவட்டத்தில் கோவில் காவலாளி லாக்கப் மரணம் தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட 5- ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எதற்காக இந்த வழக்கு மாற்றப்பட்டது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருடியதாக மதுரையை சேர்ந்த நிகிதா என்ற பெண் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அளித்த புகார் அடிப்படையில், திருப்புவனம் போலீசார் அந்த இளைஞனை அழைத்துச் சென்று கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்திருந்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அஜித்குமார் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக, அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் 5- ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த வழக்கு விசாரணை விரைவாக நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் காவலாளியை கொடூரமாக தாக்கிய போலீசார்
நகை திருடியதாக அளிக்கப்பட்ட புகாரில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரை தனிப்படை போலீசார் கோவிலின் பின்பகுதியில் வைத்து கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமான முறையில் தாக்கி, பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவி கொடூரமான முறையில் கொலை செய்திருந்தனர். இந்த விவகாரம் பூதாகரம் ஆன நிலையில், மானாமதுரை தனிப்படை காவலர்கள் கண்ணன், ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன், பிரபு, ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வருகின்றனர்.
மேலும் படிக்க: திருமணமான 5 மாதத்தில் விபரீதம்.. தூக்கில் பிணமாக தொங்கிய மருத்துவ மாணவி.. மதுரை போலீசார் தீவிர விசாரணை!




நீதிமன்றத்தில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த சம்பவம் நிகழ்ந்த போது மானாமதுரை காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சண்முக சுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார், காவலர் இளையராஜா ஆகியோருக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக குற்ற பத்திரிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை வருகிற ஜூலை 29- ஆம் தேதியில் இருந்து 5- ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற உள்ளது.
நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நகை திருடியதாக அஜித்குமார் மீது நிகிதா என்ற பெண் அளித்த புகார் முற்றிலும் பொய்யானது என்று தெரியவந்தது. இந்த திருட்டு வழக்கை சிபிஐ நீதிமன்றம் முடித்து வைத்திருந்தது. குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: உணவு கொடுக்காததால் ஆத்திரம்.. குத்தூசியால் மனைவியை குத்தி கொன்ற கணவர்.. திருச்சியில் கொடூரம்!