2 பெரும் தவறுகளை செய்து விட்டேன்.. அதிமுக-திமுகவை குறிப்பிட்டு வைகோ விமர்சனம்!
MDMK General Secretary Vaiko : அதிமுக மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்ததை நான் செய்த இரு பெரும் தவறுகள் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்து உள்ளார் .
தமிழக சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி அமைத்து 2 தவறுகளை செய்து விட்டதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கட்சியின் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தி திணித்தார்கள். திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இருந்த போது நான் திமுக அரசையோ அல்லது திமுகவையோ விமர்சித்து பேசி இருந்தால் அடுத்த கட்டமாக மதிமுகவை கூட்டணியில் இருந்து அவர்களை விலக்கி இருப்பார்கள். எனது வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துள்ளேன். அதில், ஒன்று கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் உடன்பாடு வைத்தது.
அதிமுக- திமுவுடன் கூட்டணி அமைத்தது முதல் தவறு
அன்றைய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகிகள் மற்றும் முன்னணியினர் என்னை நிர்பந்தம் செய்து அதிமுக பொதுச் செயலாளரை சந்திக்க வைத்தனர். அப்போது, அந்த நிர்பந்தத்துக்கு நான் உடன்படாமல் அதிமுகவுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் மதிமுக வலிமையாகவும், பொலிவும் பெற்றிருக்கும். இதே போல, கடந்த 2017- ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்துடன் உடன்பாடு வைத்தது நான் செய்த 2- ஆவது பெரிய தவறாகும்.
மேலும் படிக்க: பிறந்த குழந்தையைப் பார்க்க லஞ்சம் கேட்ட கொடூரம்.. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் டிஸ்மிஸ்.. ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர்!




சரியான முடிவுகளை மதிமுக எடுத்துள்ளது
பொதிகை மலை உறுதியாக இருப்பதைப் போன்று நானும், மதிமுகவும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டுள்ளோம். எனவே, வரும் காலங்களில் யாரும் நமக்கு எந்த விதமான கேடுகளையும் செய்ய முடியாது. வைரம் பாய்ந்த வஜ்ரம் போன்ற கண்மணிகளே நீங்கள் லட்சோப லட்சம் பேர் இருக்கிறீர்கள். கிரேக்க புராணத்தில் பீனிக்ஸ் பறவை என்று குறிப்பிடப்பட்டது கற்பனை தான். நடைமுறையில் சரிவில் இருந்து மீண்டு, ஓங்கி உயர்ந்து தலை நிமிர்ந்து தமிழக அரசியலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் பயணிக்கிறது.
மதிமுகவுக்கு எதிர்காலத்தில் தோல்வி கிடையாது
எனவே, இனி வரும் காலங்களில் நமக்கு தோல்வி என்பது கிடையாது. வெற்றியின் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலைமையை எண்ணி நாம் தடைகளை தகர்த்து, நம்மை விரித்த நினைப்பவர்களை எண்ணங்களை முறியடித்து செம்மாந்து நடப்போம் என்று அந்த கடிதத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: விதிகளை மீறிய அதிகாரிகள்.. நகராட்சி நிர்வாகத் துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!