AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பழனி நில மோசடி வழக்கு.. சிசிடிவி காட்சிகளை முடக்கி சிபிசிஐடி தீவிர விசாரணை!!

Palani Temple Land Scam: பழனி தண்டாயுதபாணி மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அன்றைய தினத்தின் சிசிடிவி காட்சிகள் மற்றும் திடீர் விடுப்பில் சென்ற சார்பதிவாளர் விவகாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பழனி நில மோசடி வழக்கு.. சிசிடிவி காட்சிகளை முடக்கி சிபிசிஐடி தீவிர விசாரணை!!
சிபிசிஐடி போலீசார் விசாரணை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 17 Jul 2026 12:09 PM IST

திண்டுக்கல், ஜூலை 17: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை அதிரடியாகத் தீவிரப்படுத்தியுள்ளனர். பத்திரப்பதிவு நடந்த குறிப்பிட்ட நாளில் சார்பதிவாளர் விடுப்பில் சென்றது மற்றும் தற்காலிகமாகப் பொறுப்பேற்ற அதிகாரிக்கு “டூட்டி” போட்டது யார் என்பது உள்ளிட்ட பல கோணங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை லாக் செய்துள்ளனர்.

இதையும் படிக்க: விதிகளை மீறிய அதிகாரிகள்.. நகராட்சி நிர்வாகத் துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

வழக்கின் பின்னணி என்ன?

பழனி மலைக்கோயில் அடிவாரப் பகுதியில், தண்டாயுதபாணி மட அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தை, அந்த மடத்தின் நிர்வாகியாகக் கருதப்படும் முருகதாஸ் சுவாமிகள் மற்றும் இரு தனிநபர்கள் இணைந்து சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்து கொண்டதாகப் புகார் எழுந்தது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த வழக்கின் விசாரணை உடனடியாக சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

சிசிடிவி காட்சிகள் முழுமையாகக் கைப்பற்றல்:

சிபிசிஐடி போலீசார் முதற்கட்டமாகப் பத்திரப்பதிவு அலுவலகத்தை மையமாகக் கொண்டு தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்கள் பின்வருமாறு. சர்ச்சைக்குரிய பத்திரப்பதிவு நடந்த குறிப்பிட்ட நாளான (ஜூலை 6ம் தேதி) அன்று, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவான ஒட்டுமொத்த சிசிடிவி காட்சிகளையும் சிபிசிஐடி போலீசார் முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். அலுவலகத்திற்கு அன்றைய தினம் யாரெல்லாம் வந்து சென்றார்கள்? நிலத்தை வாங்கிய மற்றும் விற்ற நபர்களுடன் வந்த இதர ஆட்கள் யார் இதில் வேறு ஏதேனும் இடைத்தரகர்கள் அல்லது பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பின்புலமாகச் செயல்பட்டுள்ளனரா? என்பதை உறுதி செய்ய அன்றைய தினத்தின் 24 மணி நேர காட்சிகளும் நுணுக்கமாக ஆராயப்பட்டு வருகின்றன.

சார்பதிவாளர் திடீர் விடுப்பு – திட்டமிடப்பட்ட சதியா?

பத்திரப்பதிவு நடைபெற்ற அந்த குறிப்பிட்ட நாளில், பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தின் சார்பதிவாளரான ஈஸ்வரி திடீரென விடுப்பில் சென்றுள்ளார். அவருக்குப் பதிலாகக் கொடைக்கானல் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் அன்றைய தினம் பழனி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர் முன்னிலையிலேயே இந்த விதிகளுக்குப் புறம்பான நிலப் பதிவு நடந்துள்ளது.

சார்பதிவாளர் ஈஸ்வரி திட்டமிட்டே விடுப்பில் சென்றாரா? கொடைக்கானல் அதிகாரி ஜஸ்டின் மணிகண்டனுக்கு பழனியில் அன்றைய தினம் தற்காலிகப் பொறுப்பு வழங்கப் பரிந்துரைத்தது யார்? இதன் பின்னணியில் இருக்கும் பெரும் புள்ளிகள் யார்? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு:

அன்றைய தினம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களைத் தவிர்த்து, சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடிய நபர்களின் பட்டியலை போலீசார் தயார் செய்து வருகின்றனர். மேலும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பராமரிக்கப்படும் அதிகாரப்பூர்வப் பதிவேடுகள் மற்றும் அன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மையும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

மடத்தின் சொத்தை விற்க முருகதாஸ் சுவாமிகளுக்குத் துணை நின்றவர்கள் மற்றும் முறைகேடாக நிலத்தை வாங்கிய இரு நபர்களுடனும் வந்த பிற நபர்களை அடையாளம் காண சிபிசிஐடி-யில் பிரத்யேகத் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: நாகர்கோவில் சிறை மரண விவகாரம்.. அரசு நிவாரணங்களை நிராகரித்த குடும்பத்தினர்.. அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!

அடுத்தகட்ட நடவடிக்கை:

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய நபர்களை விரைவில் நேரில் அழைத்து விசாரிக்கச் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். கோயில் நில மோசடியில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருந்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us