நாகர்கோவில் சிறை மரண விவகாரம்.. அரசு நிவாரணங்களை நிராகரித்த குடும்பத்தினர்.. அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!
Nagercoil jail custodial death: நாகர்கோவில் சிறை மரண விவகாரத்தில் பலியான சபரிவர்மன் குடும்பத்தினருடன் தமிழக அமைச்சர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, அரசு அறிவித்த 10 லட்ச ரூபாய் நிவாரணம் மற்றும் தற்காலிக அரசு வேலையை வாங்க மறுத்து, உடலை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகர்கோவில், ஜூலை 17: நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த சபரிவர்மன் மரணமடைந்த விவகாரத்தில், அவரது குடும்பத்தினருடன் தமிழக அமைச்சர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. அரசு அறிவித்த நிவாரண உதவிகள் மற்றும் தற்காலிக அரசு வேலை ஆகியவற்றை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன் என்பவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிறைக் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: விஜயபாஸ்கர்களுக்கு சிக்கல்.. சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக வழக்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
உறவினர்களின் முக்கியக் கோரிக்கைகள்:
சபரிவர்மன் மரணத்திற்கு நீதி கேட்டு முதலமைச்சர் இரங்கல் மற்றும் கண்டன அறிக்கை வெளியிட வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள முரண்பாடுகளை முழுமையாகக் களைய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோருடன் சபரிவர்மனின் இல்லத்திற்கு நேரில் சென்றனர். சபரிவர்மனின் மனைவி ஆனந்தவல்லி, அவரது சகோதரி கௌதமி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல் கூறினர்.
அமைச்சர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தை:
தொடர்ந்து அரசு தரப்பில், தற்காலிக அரசு வேலை வாய்ப்பு, குழந்தையின் கல்விக்கான முழு நிதியுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் இலவச வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்ட 3 லட்ச ரூபாய், தற்காலிக நிவாரணமாக 10 லட்ச ரூபாய் நிதி உதவி நிவாரணங்கள் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், குடும்பத்தினருடன் அமைச்சர்கள் சுமார் 20 நிமிடங்கள் நடத்திய தீவிரப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அரசு அறிவித்த நிவாரணங்களை வாங்க மறுத்த உறவினர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக நின்றனர். இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அமைச்சர்கள் அங்கிருந்து வேகவேகமாகப் புறப்பட்டுச் சென்றனர்.
வழக்கறிஞரின் விளக்கம் மற்றும் குற்றச்சாட்டு:
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வழக்கறிஞர் எர்ஷத் அகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது, பிரேத பரிசோதனை அறிக்கையில் சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த காயங்களால் தான் அவர் உயிரிழக்கவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதையும் படிக்க: திருமணமான 5 மாதத்தில் விபரீதம்.. தூக்கில் பிணமாக தொங்கிய மருத்துவ மாணவி.. மதுரை போலீசார் தீவிர விசாரணை!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் படி சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் வாழ்வதற்கான உரிமை உண்டு. தங்களது சொந்த மருத்துவக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே உடலைப் பெற்றுக்கொள்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். உடலை வாங்கும்படி காவல்துறையினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.