நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. 11.21 லட்சம் பேர் தேர்ச்சி.. முடிவுகளை அறிவது எப்படி? இதோ முழு தகவல்!
NEET UG Results Declared: நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையால் முறைப்படி வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் எழுதிய இந்த மறுதேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றுள்ளதோடு, 58% தேர்ச்சி விகிதத்துடன் மாணவிகள் மீண்டும் பெரும் சாதனை படைத்துள்ளனர்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET UG) நுழைவுத் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்புகளான MBBS, BDS, ஆயுஷ் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு இந்த முடிவுகள் அடிப்படையாக அமையவுள்ளன. வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக முன்னதாக நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டு, பின்னர் ஜூன் 21 அன்று நாடு முழுவதும் உள்ள 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் என மொத்தம் 5,440 தேர்வு மையங்களில் இந்த மறுதேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட்டது.
இதையும் படிக்க: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் – லஞ்சமாக பெறப்பட்ட ரூ.5 லட்சம் – சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி தகவல்
தேர்ச்சி புள்ளிவிவரங்கள்:
நீட் தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 20 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் மொத்தம் 11.21 லட்சம் (11,21,118) பேர் தேர்ச்சி பெற்று மருத்துவக் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்றவர்களில், நாட்டின் அனைத்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களும் அடங்குவர். மாநில வாரியாகப் பார்க்கும்போது, அதிகபட்சமாக உத்திரப் பிரதேசத்தில் இருந்து 1.7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் மீண்டும் முதலிடம்:
இந்த ஆண்டின் தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று முத்திரை பதித்துள்ளனர். மொத்த தேர்ச்சியாளர்களில் 58 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாணவிகள் ஆவர். தேர்வெழுதிய மாணவிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 56.8% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 55.1% ஆகவும் பதிவாகியுள்ளது.
முதலிடம் பிடித்த சாதனையாளர்கள்:
இந்தத் தேர்வில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பன்ஷுல் பன்சால் ஆகிய இரு மாணவர்கள் 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் கூட்டுத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
தேசிய அளவில் 138 மாணவர்கள் 690 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளனர். இவர்களில் 19 பேர் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். குறிப்பாக, இந்த உயர்மதிப்பெண் பெற்றவர்களில் 93 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதல்முறையாக நீட் தேர்வை எழுதியவர்கள் என்பதும், 99 சதவீதத்தினர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரைவான மதிப்பீட்டு முறை:
மருத்துவக் கலந்தாய்வு மற்றும் சேர்க்கை அட்டவணை தாமதமாகாமல் இருக்க, மதிப்பீட்டு முறையை மறுவடிவமைப்பு செய்து இந்தத் தேர்வு முடிவுகளை NTA திட்டமிட்ட காலத்திற்குள் வெளியிட்டுள்ளது. OMR விடைத்தாள் சரிபார்ப்பு, இறுதி விடைக்குறிப்பு வெளியீடு போன்ற நடைமுறைகளை இணைத்து இம்முறை விரைவாக முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் அட்டையை (Scorecard) நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போலியான சேர்க்கை சலுகைகள் அல்லது அங்கீகரிக்கப்படாத கலந்தாய்வு செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே அணுகுமாறும் NTA மாணவர்களை அறிவுறுத்தியுள்ளது.
முடிவுகளை அறிவது எப்படி?
உங்களது கணினி அல்லது அலைபேசியில் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ நீட் தேர்வு இணையதளமான exams.nta.ac.in/NEET அல்லது neet.nta.nic.in ஆகிய பக்கங்களுக்குச் செல்லவும். அந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள “NEET (UG) Scorecard” அல்லது “NEET UG Result” என்ற லிங்கை கிளிக் செய்யவும். இப்போது திறக்கும் புதிய பக்கத்தில், உங்களுடைய விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதி (DOB) ஆகிய விவரங்களைச் சரியாக உள்ளிடவும்.
இதையும் படிக்க: மூன்றாவது மொழி பாடத்தில் தேர்ச்சி கட்டாயம் – சிபிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு
திரையில் தோன்றும் பாதுகாப்பு குறியீட்டு எண்ணை (Security Pin / Captcha) உள்ளிட்டு, ‘Submit’ என்ற பொத்தானை அழுத்தவும். இப்போது உங்களுடைய நீட் தேர்வு மதிப்பெண் ஸ்கோர் கார்டு திரையில் தோன்றும். அதில் உள்ள விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ளவும்.