El-Nino Effect: வலுவடையும் எல்-நினோ.. இந்தியாவில் இதன் தாக்கம் பருவமழை மீது எப்படி இருக்கும்?
இந்தியாவிலும் பருவமழை ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நீண்டகால சராசரியில் 90 சதவீதம் மட்டுமே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜூன் மாதத்தில் மழைப்பொழிவு இயல்பை விட சுமார் 40 சதவீதம் குறைந்து, 126 ஆண்டுகளில் 5வது வறண்ட ஜூனாக பதிவாகியுள்ளது.
ஜூலை 16, 2026: வேகமாக வலுவடைந்து வரும் ‘எல் நினோ’ நிகழ்வு, நவீன காலத்தில் பதிவான மிக வலுவான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக உருவாகக்கூடும் என காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமான NOAA, எல் நினோ நிலைமைகள் உருவாகியுள்ளதாக உறுதி செய்துள்ளது. 14 பருவகால காலநிலை மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட 667 கணிப்புகளை ஆய்வு செய்த காலநிலை விஞ்ஞானி ஸீக் ஹவுஸ்ஃபாதரின் ஆய்வின்படி, இந்த எல் நினோ 1982-83, 1997-98 மற்றும் 2015-16 ஆண்டுகளில் பதிவான வலுவான நிகழ்வுகளையும் விஞ்சக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்:
‘நினோ 3.4’ பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 3.6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2015-16ஆம் ஆண்டில் பதிவான 2.75 டிகிரி செல்சியஸ் என்பதே அதிகபட்சமாக இருந்தது. மேலும், 90 சதவீதத்துக்கும் அதிகமான கணிப்பு மாதிரிகள், இந்த எல் நினோ நவீன காலத்தில் பதிவான எந்த நிகழ்வையும் விட வலுவாக இருக்கும் என தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. ஜூலை 17ஆம் தேதி தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி.. சிறப்புகள் என்ன?
ஜூலை 13ஆம் தேதி ‘நினோ 3.4’ பகுதியில் வெப்பநிலை இயல்பை விட 2.2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இதுபோன்ற வேகமான வெப்பநிலை உயர்வு, முந்தைய வலுவான எல் நினோ நிகழ்வுகளை விட தற்போதைய நிகழ்வு வேகமாக வளர்ந்து வருவதை காட்டுகிறது.
இதன் தாக்கமாக உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எல்-நினோ தாக்கத்தால் பருவமழை எவ்வாறு பாதிக்கும்?
இந்தியாவிலும் பருவமழை ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நீண்டகால சராசரியில் 90 சதவீதம் மட்டுமே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜூன் மாதத்தில் மழைப்பொழிவு இயல்பை விட சுமார் 40 சதவீதம் குறைந்து, 126 ஆண்டுகளில் 5வது வறண்ட ஜூனாக பதிவாகியுள்ளது. ஜூலை மாதத்திலும் மழைப்பொழிவு 19 சதவீதம் குறைவாக உள்ளது.
மேலும் படிக்க: டிடர்ஜெண்ட் பவுடர் மற்றும் பாமாயில் கலந்த பால்.. 2 லட்சம் கிலோ தரமற்ற பால் பவுடர் – மகாராஷ்டிராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
இதன் தாக்கம் விவசாயத்திலும் காணப்படுகிறது. ஜூலை 10ஆம் தேதி நிலவரப்படி, காரீஃப் பயிர் விதைப்பு கடந்த 5 ஆண்டு சராசரியை விட 3 சதவீதம் குறைந்துள்ளது. நெல் சாகுபடியும் கடந்த ஆண்டை விட சுமார் 9 சதவீதம் குறைந்துள்ளதால், எல் நினோ வலுவடைந்தால் இந்தியாவின் பருவமழை மற்றும் விவசாயத்தில் மேலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.