AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குழந்தைகளுக்கு கொடுக்கும் பாராசிட்டமால் சிரப்பில் 95% ஆல்கஹால்? சுகாதாரத்துறை கொடுத்த விளக்கம்..

மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் தரமானவையாக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கான பாராசிட்டமால் சிரப்பில் 95 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என்றும், பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

குழந்தைகளுக்கு கொடுக்கும் பாராசிட்டமால் சிரப்பில் 95% ஆல்கஹால்? சுகாதாரத்துறை கொடுத்த விளக்கம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Jul 2026 09:43 AM IST

ஜூலை 17, 2026: குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் சிரப்பில் அதிக அளவு ஆல்கஹால் கலக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் போது மருத்துவர்களால் பாராசிட்டமால் அடிப்படையிலான பல்வேறு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. குறிப்பாக P-120, P-150, P-250, குரோசின் உள்ளிட்ட பாராசிட்டமால் சிரப் வகைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், குழந்தைகளுக்கான பாராசிட்டமால் சிரப்பில் 95 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனால் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும், குழப்பமும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறை கொடுத்த விளக்கம்:

அதன்படி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்ட Paracetamol Paediatric Syrup IP 125 mg/5 ml மருந்தின் TN2504041 என்ற தொகுதி, 2024-25 நிதியாண்டில் Adroit Pharmaceuticals Pvt. Ltd. நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தரநிலைக்கு ஏற்ப இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதே நிறுவனத்தால் தயாரித்து வழங்கப்பட்ட பல்வேறு தொகுதி மருந்துகளும் சென்னை அரசு மருந்துப் பரிசோதனை ஆய்வகத்தில் அரசு ஆய்வாளரால் பரிசோதிக்கப்பட்டு, தரமானவை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காலையில் துள்ளி குதித்து பள்ளி சென்ற மாணவன்.. மாலையில் பிணமாக வீடு திரும்பினார்.. கள்ளக்குறிச்சியில் சோகமான நிகழ்வு!

இந்திய மருந்துக் குறிப்பேட்டின்படி, சிரப் வகை மருந்துகளில் பாதுகாப்புப் பொருளாகவோ அல்லது சுவையூட்டும் பொருட்களை கலப்பதற்கான கரைப்பானாகவோ ஆல்கஹால் பயன்படுத்தப்படலாம். இதன்படி, குறிப்பிட்ட அளவில் ஆல்கஹால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

சிரப்பில் 10 சதவீதம் ஆல்கஹால் கலப்பு:

மேலும், சம்பந்தப்பட்ட 60 மில்லி பாராசிட்டமால் சிரப்பில் 95 சதவீதம் ஆல்கஹால் முழுமையாக சேர்க்கப்படவில்லை என்றும், அனுமதிக்கப்பட்ட பயன்பாட்டுக்காக 95 சதவீத தரநிலையிலான ஆல்கஹாலில் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களில் குறிப்பிடப்படுவது போல், அந்த சிரப்பில் மொத்தமாக 95 சதவீத ஆல்கஹால் இல்லை என்றும் சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய மருந்துக் குறிப்பேட்டில் குறிப்பிடப்படும் Alcohol 95% v/v என்பது மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட தரநிலையிலான ஆல்கஹாலை குறிக்கிறது. அது தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்ட சிரப்பில் 95 சதவீதம் ஆல்கஹால் உள்ளது என்பதைக் குறிக்காது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுப்பிரியர்களுக்கு டபுள் தமாக்கா.. டாஸ்மாக்கில் 54 புதிய ரக மதுபானங்கள்.. என்னென்ன தெரியுமா!

அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மருந்து தரநிலைக்கு ஏற்ப இருப்பது உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அந்த மருந்து அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல்கள் நம்ப வேண்டாம்:

மேலும், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் அனைத்து மருந்துகளும், மேற்கண்ட பாராசிட்டமால் மருந்து உட்பட, 180 நாட்களுக்கு ஒருமுறை வழக்கமான மாதிரி சேகரிப்பு மற்றும் தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதவிர, சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற துறைகள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு அரசு மருத்துவ நிறுவனங்களில் அவ்வப்போது மருந்துகளை மாதிரி எடுத்து பரிசோதித்து வருகின்றனர். மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் தரமானவையாக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, குழந்தைகளுக்கான பாராசிட்டமால் சிரப்பில் 95 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என்றும், பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Follow Us