முட்டை விலை உயர்வு.. ஏழைகளின் புரோட்டீன் உணவுக்கு வந்த சோதனை.. ஹோட்டல்களிலும் ஆம்லெட் விலை அதிகரிப்பு!
Egg price hike: முட்டையின் விலை அண்மைக்காலமாக சில்லறை விற்பனைச் சந்தையில் ₹8 ஆக உயர்ந்துள்ளதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் அன்றாட புரதச்சத்து உணவிற்கான செலவைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் ஹோட்டல்களில் ஆம்லெட் மற்றும் ஆஃப் ஆயில் விலையும் ₹20 வரை அதிகரித்துள்ளது.
சென்னை, ஜூலை 17: வளரும் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் தினசரி தேவையாக இருக்கும் முட்டையின் விலை அண்மைக்காலமாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது சில்லறை விற்பனையில் ஒரு முட்டையின் விலை ரூ.8 வரை உயர்ந்துள்ளது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புரதச்சத்து மிகுந்த, எளிதில் கிடைக்கக்கூடிய மிகக் குறைந்த விலை உணவாக முட்டை இருந்து வந்தது. சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளைத் தவிர்ப்பவர்கள் தங்களின் உடலுக்குத் தேவையான புரதச்சத்தைப் பெற முட்டையையே பெரிதும் நம்பியிருந்தனர். ஆனால் இந்த விலை உயர்வு அவர்களின் பட்ஜெட்டைப் பதம் பார்த்து வருகிறது.
இதையும் படிக்க: வருகிறது 10 கிலோ கேஸ் சிலிண்டர்.. தீவிர ஆலோசனையில் எண்ணெய் நிறுவனங்கள்!
மொத்த விற்பனையிலும் விலை ஏற்றம்:
முன்பு ஒரு முட்டைப் பெட்டி (30 முட்டைகள் கொண்ட ஒரு டிரே) ரூ.180 முதல் ரூ.190 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை ரூ.240 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகச் சில்லறைக் கடைகளில் ஒரு முட்டையின் விலை ரூ.8 ஆக அதிகரித்துள்ளது. “நாங்கள் சாதாரணமாக மொத்த விலைக் கடைகளை நம்பித்தான் முட்டை வாங்குவோம். ஆனால் இப்போது அங்கும் விலை உயர்ந்துவிட்டதால் எங்களைப் போன்ற நடுத்தர மக்கள் எப்படிப் புரதச்சத்து நிறைந்த உணவுகளை வாங்குவது?” என நுகர்வோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடற்பயிற்சியாளர்களுக்குப் பாதிப்பு:
ஜிம்மிற்குச் செல்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களது கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பேண தினமும் 4 முதல் 10 முட்டைகள் வரை உட்கொள்வது வழக்கம். “கடந்த வாரம் வரை ஒரு முட்டை ரூ.6க்கு விற்றது. தற்போது ரூ.8 ஆக உயர்ந்திருப்பதால், நாளொன்றுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை கூடுதல் செலவாகிறது. இது மாதக் கணக்கில் பார்க்கும் போது பட்ஜெட்டில் பெரிய ஓட்டையை ஏற்படுத்துகிறது” என உடற்பயிற்சி ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எகிறிய ஆம்லெட், ஆஃப் ஆயில் விலைகள்:
ஏற்கனவே சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக உணவகங்களில் உணவுகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் முட்டை விலையேற்றமும் சேர்ந்து கொண்டதால் ஹோட்டல்களில் முட்டை சார்ந்த உணவுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஹோட்டல்களில் முன்பு ரூ.15க்கு விற்கப்பட்ட ஆம்லெட் மற்றும் ஆஃப் ஆயில் தற்போது ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கப்படுகிறது. முட்டை பிரைடு ரைஸ், எக் நூடுல்ஸ் போன்ற உணவுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் ஹோட்டல்களுக்குச் சென்று முட்டை சார்ந்த உணவுகளை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: இதுவரை இல்லாத அளவு உயர்ந்த பண வீக்கம்.. அத்தியாவசிய பொருட்களின் விலை உயரப்போகிறது!
அரசின் தலையீட்டிற்கு மக்கள் கோரிக்கை:
கோடிக்கணக்கான மக்களின் ஆரோக்கிய அரணாக விளங்கும் முட்டையின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நுகர்வோரின் பிரதான கோரிக்கையாக உள்ளது. முட்டையின் விலை விரைவில் சரிந்து ஏழை எளிய மக்களின் கைக்கு எட்டும் விலைக்கு வர வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாகும்.