தமிழகம் முழுவதும் பரபரப்பு.. வட்டாட்சியர் அலுவலகங்களை அலறவிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
Anti Corruption Police Raids : தமிழகத்தில் பல்வேறு வட்டாட்சியர் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், ஊழலுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் முதல் ஊழியர்கள் வரை யாரும் லஞ்சம் பெறாத வகையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவ்வப்போது அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது, தமிழகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று வெள்ளிக்கிழமை ( ஜூலை 17- ஆம் தேதி) அதிரடி லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டனர். இதில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு வட்டாட்சியர் அலுவலகங்களில் அந்தந்த மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடியாக புகுந்த போலீசார்
மாலை நேரத்தில் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் அலுவலகப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து அலுவலம் முடிவடையும் நேரத்தில் கணக்கில் வராத பணம் கையாளப்படும் என்பதன் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, அந்தந்த அலுவலகங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊழல் தடுப்பு போலீசார் டிஎஸ்பி மற்றும் ஏடிஎஸ்பி தலைமையிலான போலீசார் அதிரடியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளே புகுந்தனர்.
மேலும் படிக்க: டாஸ்மாக்கில் திடீர் மாற்றம்?.. மதுக்கடைகளைக் குறைத்து ‘ரெஸ்ட்ரோ பார்களை’ அதிகரிக்கத் தமிழக அரசு திட்டம்.. சமூக ஆர்வலர்கள் அச்சம்!!




அலுவலர்களின் செல்போன்கள் பறிமுதல்
அப்போது, அரசு அலுவலர்களை தவிர பொதுமக்கள் உள்ளிட்டோர் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, அலுவலகங்களின் கதவு மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டு, ஊழியர்களின் செல்போன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அலுவலகத்தில் உள்ள மேஜைகள், அலமாரிகள் உள்ளிட்டவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
சோதனையின் முடிவில் பறிமுதல் விவரம் வெளியீடு
இந்த சோதனையின் முடிவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குனரகம் தரப்பில் இருந்து சோதனையில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பிறந்த குழந்தையைப் பார்க்க லஞ்சம் கேட்ட கொடூரம்.. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் டிஸ்மிஸ்.. ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர்!