இனி கேஸ் சிலிண்டரையும் ஸ்விகியில் ஆர்டர் செய்யலாம் – சில நிமிடங்களில் கிடைக்கும் – எப்படி செய்வது?
இனி உணவுகள், மளிகைப்பொருட்களை போல இனி எல்பிஜி சிலிண்டரையும் லைன் மூலம் ஆர்டர் செய்து சில நிமிடங்களில் பெறலாம். இதற்காக ஸ்விகி நிறுவனத்தின் இன்ஸ்டாமார்ட் சேவையும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் இணைந்து புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் அதிக வேகமாக வளர்ந்து வருகின்றன. தற்போது உணவுகள், மளிகை பொருட்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சில நிமிடங்களில் நம் வீடுகளுக்கே டெலிவரி செய்யப்படுகின்றன. இது மக்களின் வாழ்க்கையை எளிமையாக மாற்றி வருகிறது. இந்த நிலையில் இனி உணவுகள், மளிகைப்பொருட்களை போல இனி எல்பிஜி சிலிண்டரையும் லைன் மூலம் ஆர்டர் செய்து சில நிமிடங்களில் பெறலாம். இந்த சேவையை இந்தியாவின் மிக முக்கிய ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஸ்விகி இந்த சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ஸ்விகி நிறுவனத்தின் இன்ஸ்டாமார்ட் சேவையும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் இணைந்து எல்பிஜி சிலிண்டர்களை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே சில நிமிடங்களில் டெலிவரி செய்யும் வகையில் புதிய சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த சேவை பெங்களூருவில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து படிப்படியாக மற்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 5 மற்றும் 10 கிலோ எடை கொண்ட சிறிய எல்பிஜி சிலிண்டர்களை மட்டுமே நம்மால் ஸ்விகி இன்ஸ்டாமார்ட் செயலியின் மூலம் நம்மால் ஆர்டர் செய்ய முடியும். பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் வழக்கமான 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள் தற்போது ஸ்விகி இன்ஸ்டாமார்ட் சேவையில் இடம் பெறவில்லை
இந்த 5 மற்றும் 10 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்பதால் தற்காலிகமாக வாடகை வீடுகளில் வசிப்பவர்கள், மாணவர்கள், சிறிய குடும்பங்கள் ஆகியோருக்கு இந்த சேவை மிக பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேஸ் இணப்பு இருந்தால் மட்டுமே சிலிண்டர்களை ஆர்டர் செய்ய முடியுமா?
இந்த திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டர்களை ஆர்டர் செய்ய வாடிக்கையாளர்களிடம் ஏற்கனவே எச்பி கேஸ் இணைப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை என அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் வேலை மற்றும் படிப்புக்காக சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கியிருப்பவர்களுக்கு இந்த திட்டம் பெரும் பயனுள்ளதாக இருக்கும். என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்விகி இன்ஸ்டாமார்ட்டில் எல்பிஜி சிலிண்டர் ஆர்டர் செய்வது எப்படி?
இதற்காக முதலில் ஸ்விகி செயலிக்கு சென்று இன்ஸ்டாமார்ட் பகுதியில் எல்பிஜி சிலிண்டர் பிரிவை தேர்வு செய்ய வேண்டும். அதில் 5 கிலோ மற்றும் 10 கிலோ சிலிண்டரை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் டெலிவரி செய்ய வேண்டிய முகவரி மற்றும் பணம் செலுத்தி ஆர்டரை உறுதி செய்துகொள்ளவேண்டும். இதனையடுத்து ஹெச்பியின் அங்கீகரிக்கப்பட்ட விநியோக அமைப்பு மூலம் வாடிக்கையாளர்களிடம் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.