காரில் எந்த வேகத்தில் பயணித்தால் சிறந்த மைலேஜ் கிடைக்கும்? சிறந்த மைலேஜ் கிடைக்க எளிய வழிகள்
மைலேஜைத் தீர்மானிப்பதில் இன்ஜின் மட்டுமே முக்கிய காரணி அல்ல. நீங்கள் காரை ஓட்டும் விதமும் மைலேஜை பாதிக்கும் முக்கிய காரணியாக இருந்து வருகிறது. காரில் எந்த வேகத்தில் பயணித்தால் சிறந்த மைலேஜ் கிடைக்கும்? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று பெரும்பாலான மக்கள் சிறந்த மைலேஜ் தரும் கார்களை வாங்கவே விரும்புகிறார்கள். இருப்பினும், மைலேஜைத் தீர்மானிப்பதில் இன்ஜின் மட்டுமே முக்கிய காரணி அல்ல. நீங்கள் காரை ஓட்டும் விதமும் மைலேஜை பாதிக்கும் முக்கிய காரணியாக இருந்து வருகிறது. சரியான ஓட்டுநர் முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், அதே காரைக் கொண்டு அதிக தூரம் பயணிக்கவும் அதே சமயம் எரிபொருளைச் சேமிக்கவும் முடியும். இதில் காரின் வேகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
காரில் சீரான மைலேஜை கடைபிடிப்பது எப்படி?
நீங்கள் அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர் என்றால், மிக அதிக வேகத்தில் செல்வதை விட சீரான வேகத்தில் செல்வது சிறந்தது. பெரும்பாலான கார்கள் மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் சிறந்த மைலேஜை வழங்குவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த வேகத்தில், இன்ஜின் உயர் கியரில் சீராக இயங்குவதால் எரிபொருள் பயன்பாடு குறைகிறது. மேலும், அடிக்கடி வேகத்தை அதிகரிப்பதையும் பிரேக் பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அதிக எரிபொருள் பயன்பாட்டிற்கு வழிவகுக்கும்.
இதையும் படிக்க : வாகனங்களின் இன்ஜினை பழுதாக்கும் E20 பெட்ரோல்?.. மத்திய அரசு விளக்கம்!




நகரச் சாலைகளில் உள்ள கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி பிரேக் பிடிக்க வேண்டியதும், கியர் மாற்ற வேண்டியதும் அவசியமாகிறது. இத்தகைய சூழலில், மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரையிலான வேகம் சிறந்தது எனக் கருதப்படுகிறது. தேவையில்லாமல் ஆக்சிலேட்டரை அழுத்துவது அல்லது திடீரெ பிரேக் பிடிப்பதை தவிர்ப்பது இன்ஜின் மீதான அழுத்தத்தைக் குறைத்து, மைலேஜை மேம்படுத்தும்.
அதிக வேகம் ஏன் எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கிறது?
சாலை ஃபீரியாக இருந்தால் பல ஓட்டுநர்கள் வேகத்தை மணிக்கு 100 அல்லது 120 கி.மீ வரை அதிகரிக்கிறார்கள். ஆனால், வேகம் அதிகரிக்கும்போது காற்றின் எதிர்ப்பும் அதிகரிக்கிறது. இந்த எதிர்ப்பை முறியடிக்க இன்ஜின் அதிக ஆற்றலைச் செலவிட வேண்டியிருப்பதால், எரிபொருள் பயன்பாடு அதிகரிக்கிறது.
நிபுணர்களின் கருத்துப்படி, மணிக்கு 90 கி.மீக்கு மேல் வேகம் அதிகரிக்கும்போது மைலேஜ் படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. மணிக்கு 110 முதல் 120 கி.மீ வேகத்தில் காரை ஓட்டுவது எரிபொருள் பயன்பாட்டை சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்.
இதையும் படிக்க : வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா? புதியதாக கார் வாங்கி இருந்தால் உங்களுக்கு ரூ.10,000.. இத தெரிஞ்சுக்கோங்க!
சிறந்த மைலேஜை பெற எளிய வழிகள்
சிறந்த மைலேஜைப் பெற, உங்கள் காரை அடிக்கடி சர்வீஸ் செய்வது, டயர்களில் சரியான காற்றழுத்தத்தை வைத்துக்கொள்வது, பயணத்தின்போது கார்களில் அதிக எடை கொண்ட பொருட்களை லோடு செய்வதை தவிர்ப்பது, சிக்னல்களிலோ அல்லது நீண்ட நேரம் காத்திருக்கும்போதோ இன்ஜினை ஆஃப் செய்வது உங்கள் காரின் மைலேஜை அதிகரிக்கும். சீரான வேகத்தில் வாகனம் ஓட்டுவது எரிபொருளைச் சேமிப்பது மட்டுமல்லாமல், என்ஜினின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும், உங்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்கவும் உதவுகிறது.