இந்தியாவில் E85, E100 எரிபொருள் – வாகனங்களின் விலை உயருமா? மைலேஜ் குறையுமா?
E85 என்பது எத்தனால் கலந்த பெட்ரோல் ஆகும். இந்தியாவின் முதல் E85 பெட்ரோல் நிலையம் சமீபத்தில் டெல்லியில் திறக்கப்பட்டது. E85 மற்றும் E100 ஆகியவை எத்தனால் கலந்த பெட்ரோலாகும் இவை 'ஃப்ளெக்ஸ் ஃப்யூயல்' என்று அழைக்கப்படுகின்றன. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தற்போது E85, E100 அல்லது ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் ஆகிய எரிபொருள் வகைகள் பற்றி தான் இந்தியாவில் தற்போது அதிகம் விவாதிக்கப்படும் தலைப்பாக இருக்கிறது. E85 என்பது எத்தனால் கலந்த பெட்ரோல் ஆகும். அதாவது, இந்த எரிபொருளில் 85 சதவிகிதம் எத்தனாலும், மீதமுள்ள 15 சதவிகிதம் பெட்ரோலும் இருக்கும். இந்தியாவின் முதல் E85 பெட்ரோல் நிலையம் சமீபத்தில் டெல்லியில் திறக்கப்பட்டது. இது குறித்து இப்போது பல்வேறு விவாதங்களும் சந்தேகங்களும் எழுந்துள்ளன.
‘ஃப்ளெக்ஸ் ஃப்யூயல்’ என்றால் என்ன?
E85 மற்றும் E100 ஆகியவை எத்தனால் கலந்த எரிபொருட்கள். இவை ‘ஃப்ளெக்ஸ் ஃப்யூயல்’ என்று அழைக்கப்படுகின்றன. நாம் தற்போது பயன்படுத்தும் பெட்ரோலிலும் எத்தனால் கலக்கப்படுகிறது. சாதாரண பெட்ரோலில் இப்போது 20 சதவிகிதம் எத்தனால் உள்ளது. இது E20 என்று அழைக்கப்படுகிறது. பெட்ரோலில் எத்தனால் சேர்க்கப்படும் நிலையில், வரும் நாட்களில் எத்தனால் முக்கிய எரிபொருளாக மாறக்கூடும். E85 எரிபொருளில் 85 சதவிகிதமும், E100 எரிபொருளில் 93-95 சதவீதமும் எத்தனால் இருக்கும். இது காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவும் ஒரு எரிபொருளாகவும் உள்ளது.
இதையும் படிக்க : கடன் இல்லாத வாழ்க்கை வேண்டுமா?.. இந்த 60/30/10 ஃபார்முலாவை ட்ரை பண்ணுங்க!
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட E85 எரிபொருள், சாதாரண பெட்ரோலை விட விலை குறைவானது. ஒரு லிட்டர் E85 எரிபொருளின் விலை 82.12 ரூபாயாகும். உதாரணமாக, சாதாரண பெட்ரோலை விட இது 30 ரூபாய் அளவுக்கு விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. விலை குறைவாக இருப்பது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், E85 எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களின் மைலேஜ் 20 முதல் 35 சதவீதம் வரை குறையும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், E85 எரிபொருளைப் பயன்படுத்தக்கூடிய வாகனங்களின் விலையும் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் 500 E85 எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 5,000-ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எரிபொருளைப் பயன்படுத்தும் வகையிலான புதிய வாகன மாடல்களை உருவாக்குமாறு அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க : யுஏன் ஆக்டிவேட் செய்ய UMANG செயலி மூலம் Face Authentication செய்ய வேண்டும்.. புதிய விதி!
இந்தியாவில் E85 எரிபொருளுக்கு ஏற்ற ஒரே வாகனம் மாருதியின் வேகன் ஆர் மட்டுமே. டாடா நிறுவனமும் இந்த புதிய பிரிவில் ஒரு வாகனத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, இந்த வகையைச் சேர்ந்த இரண்டு ‘ஹீரோ பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை ‘ஸ்ப்ளெண்டர் பிளஸ்மற்றும் ஹெச் டீலக்ஸ் ஆகிய மாடல்களாகும்.
எதிர்காலத்தில் முழுமையாக ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் முறைக்கு மாற அரசு முடிவு செய்துள்ளது. இச்சூழலில், பழைய வாகனங்கள் தொடர்பாக ஒரு சிக்கல் எழுகிறது. டீசல் வாகனங்களில் எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்துவது சாத்தியமற்றது. தற்போதுள்ள பெட்ரோல் வாகனங்களின் நிலையிலும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. E85 எரிபொருளைப் பயன்படுத்த வேண்டுமானால், வாகனத்தின் இன்ஜின் மற்றும் அது சார்ந்த பாகங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.



