பழனி நில முறைகேடு வழக்கு.. கோயில் அறக்கட்டளை உறுப்பினர் வீட்டுக்கு “சீல்”.. சிபிசிஐடி அதிரடி!
Palani Land Irregularity Case : பழனி முருகன் கோயில் நிலத்தை முறைகேடாடக பத்திரப்பதிவு செய்து கொடுத்த விழுப்புரத்தை சேர்ந்த கோயில் அறக்கட்டளை உறுப்பினரும், அரசுப் பள்ளி ஆசிரியருமான முருகதாஸ் என்பவரின் வீட்டை பூட்டி சிபிசிஐடி போலீசார் சீல் வைத்தனர் .
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை தனி நபர்களுக்கு முறைகேடாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கோயில் அறக்கட்டளை உறுப்பினரும், அரசு பள்ளி ஆசிரியருமான விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ் என்பவரின் வீட்டை அதிகாரிகள் சீல் வைத்தனர். கோவில் நிலத்தை முருகதாஸ் என்பவர் திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்திருந்தார். இது தொடர்பாக, பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், முருகதாஸ் என்பவரின் வீட்டுக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் வீட்டில் சோதனை மேற்கொண்டுஸ சுமார் 50 ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து, அந்த வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.
சார் பதிவாளர்- பதிவாளர் பணியிடை நீக்கம்
பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் பெரிதான நிலையில், பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். நிலம் பத்திரப்பதிவு முறைகேடு விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களின் தொடர்பு இருப்பதன் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஷஜிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க : குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்.. இஸ்ரோ தலைவர் நாராயணன் நச் பதில்!




நில முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தலைமறைவு
இதில், வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே, இந்த விவகாரத்தில் முழுமையான ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிவதற்காக பதிவுத்துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறை சார்பில் உயர்மட்ட குழு
இதில், கூடுதல் பதிவுத்துறை தலைவர், உதவி பதிவுத்துறை தலைவர் மற்றும் ஒரு மாவட்ட பதிவாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர், பத்திரம் பதிவு செய்யப்பட்ட நாளில் பணியில் இருந்த சார் பதிவாளர், விடுமுறையில் சென்ற சார் பதிவாளர், மாவட்ட பதிவாளர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பத்திரப்பதிவு தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் இந்த குழுவினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: மின் கட்டணம் திடீர் உயர்வுக்கு என்ன காரணம்? தமிழ்நாடு அரசு விளக்கம்