AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் கொடூரம்.. செல்போன் திருடியதாகக் கூறி வாலிபரை அடித்துக் கொன்ற சொந்த மைத்துனர்.. 4 பேர் போலீசில் சரண்!!

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் செல்போன் திருடியதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், கொடுங்கையூரைச் சேர்ந்த சதீஷ் (31) என்ற இளைஞரை அவரது சொந்த மைத்துனர் காந்தி மற்றும் அவரது 3 நண்பர்கள் மாடம்பாக்கம் ஏரிக்கரையில் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொடூரம்.. செல்போன் திருடியதாகக் கூறி வாலிபரை அடித்துக் கொன்ற சொந்த மைத்துனர்.. 4 பேர் போலீசில் சரண்!!
மாதிரிப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Jul 2026 11:32 AM IST

சென்னை, ஜூலை 19: சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் எல்லைக்குட்பட்ட மாடம்பாக்கம் ஏரிக்கரையில், செல்போன் திருடியதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், இளைஞர் ஒருவரை அவரது சொந்த மைத்துனரே நண்பர்களுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  போலீஸ் தரப்பில் வெளியான தகவல்களின்படி, இக்கொலைச் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

இதையும் படிக்க: கோவையில் ரோந்துப் பணியில் அத்துமீறிய காவலர்.. இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அதிரடி கைது!

உறவினர் வீட்டுக்கு வந்த இளைஞர்:

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 31 வயதான சதீஷ் (என்கிற சக்தி) கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஜூலை 16-ஆம் தேதி, சித்தாலப்பாக்கத்தில் வசித்து வரும் தனது மைத்துனரான (மனைவியின் சகோதரர்) காந்தி என்பவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அன்று மாலை காந்தி மற்றும் அவரது நண்பர்களான குணசேகரன், அருள்குமரன், பாலு ஆகியோருடன் இணைந்து சதீஷ் மாடம்பாக்கம் ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். சதீஷ் ஏரிக்கரையில் அமர்ந்திருக்க, மற்ற நால்வரும் ஏரிக்குள் சென்று மீன்பிடித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் கரைக்குத் திரும்பியபோது, அருள்குமரனின் செல்போன் காணாமல் போயிருந்தது. அதே நேரத்தில் கரையில் இருந்த சதீஷும் அங்கிருந்து மாயமாகியிருந்தார்.

திட்டமிட்டு கடத்தல்:

சதீஷ் தான் செல்போனைத் திருடிச் சென்றிருப்பார் என்று சந்தேகித்த காந்தி மற்றும் அவரது நண்பர்கள், அவரைப் பல இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 17) தாம்பரம் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் சதீஷ் இருப்பது அவர்களுக்குத் தெரியவந்தது. உடனே அங்கு சென்ற நால்வரும், சதீஷிடம் நைசாகப் பேசி, மீண்டும் மது அருந்தலாம் எனக் கூறி மாடம்பாக்கம் ஏரிக்கரைக்கே அழைத்துச் சென்றனர்.

சம்பவ இடத்திலேயே பரிதாப பலி:

மாடம்பாக்கம் ஏரிக்கரையில் வைத்து அனைவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது, காணாமல் போன செல்போனைத் திருப்பித் தருமாறு சதீஷிடம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால், தான் செல்போனை எடுக்கவில்லை என்று சதீஷ் பலமுறை கூறியும் அவர்கள் அதனை ஏற்கவில்லை. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த மைத்துனர் காந்தி உட்பட நான்கு பேரும் சேர்ந்து சதீஷை கட்டைகளாலும் கைகளாலும் சரமாரியாகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சதீஷ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த காந்தி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

காவல் நிலையத்தில் ரவுடிகள் சரண்:

சனிக்கிழமை (ஜூலை 18) காலை ஏரிக்கரையோரமாகச் சென்ற பொதுமக்கள், அங்கு ரத்தக் காயங்களுடன் கிடந்த இளைஞரின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து சேலையூர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் சதீஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, கொலையில் தேடப்பட்டு வந்த மைத்துனர் காந்தி, குணசேகரன், அருள்குமரன் மற்றும் பாலு ஆகிய நான்கு பேரும் சேலையூர் காவல் நிலையத்தில் ஆஜராகி தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டு தஞ்சம் புகுந்தனர். போலீசார் அவர்களைக் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: சென்னையில் ரவுடிகள் வேட்டை.. காவலர்களை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ‘சரித்திரப் பதிவேடு’ ரவுடி சுட்டுப்பிடிப்பு!

அதிர்ச்சியில் சேலையூர் மக்கள்:

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் இதே சேலையூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ப்ளூடூத் சாதனம் திருடியதாகக் கூறி வடமாநில இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது செல்போன் திருட்டுச் சந்தேகத்தில் சொந்த மைத்துனரே நண்பர்களுடன் சேர்ந்து இளைஞரை அடித்துக் கொன்றிருப்பது தாம்பரம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us