லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி.. சிவகங்கையில் கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரிகள்!
Sivaganga EB Employees Arrested : சிவகங்கை மாவட்டத்தில் மின் இணைப்பு வகையை மாற்றி கொடுப்பதற்காக லஞ்சம் பெற்ற மின்துறை இளநிலை பொறியாளர் மற்றும் லைன்மேன் ஆகிய இருவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர் .
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள மணக்குடியில் மின் பகிர்மான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக சையது முகமது பாஷா ( 48 வயது) மற்றும் லைன் மேன் ஆக பஞ்சு ( 36 வயது) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். பஞ்சு தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் புதிய வீடு கட்டிய நிலையில், அந்த வீட்டுக்கான மின் இணைப்பு வகையை மாற்றி தருவதற்காக மின் வாரியத்தில் விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பான விண்ணப்பத்தின் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில், மின் இணைப்பு வகையை மாற்றி தருவதற்காக அந்த நபரிடம் முகமது பாஷா மற்றும் பஞ்சு ஆகியோர் லஞ்சம் கேட்டுள்ளனர். இதற்கு அந்த நபர் லஞ்சம் தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார்
மேலும், லஞ்சத் தொகையில் குறிப்பிட்ட தொகையை முன்னதாக வழங்குமாறு, மீதமுள்ள தொகையை பின்னர் வழங்குமாறு மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்ததாக தெரிகிறது. இதில், உடன்படாத அந்த நபர் லஞ்சம் கொடுக்க மறுத்துள்ளார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த நபரிடம் கொடுத்து சம்பந்தப்பட்ட மின்துறை ஊழியர்களிடம் வழங்குமாறு அறிவுறுத்தினர்.
மேலும் படிக்க: பழனி கோவில் நில மோசடி.. சிபிசிஐடி அதிரடி வேட்டை.. தலைமறைவான கும்பலுக்கு வலைவீச்சு!




மின்துறை ஊழியர்கள் இருவர் அதிரடி கைது
அதன் அடிப்படையில், அந்த நபர் முகமது பாஷா மற்றும் பஞ்சு ஆகியோரிடம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். இதனை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து மின்துறை ஊழியர்கள் இருவரையும் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், பலரிடம் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை
இதைத் தொடர்ந்து, மின்துறை இளநிலை பொறியாளர் சையது முகமது பாஷா மற்றும் லைன் மேன் பஞ்சு ஆகியோர் மீது போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மின்துறை சேர்ந்த இருவர் லஞ்சவ வழக்கில் கைதானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தமிழக அமைச்சர்களுடன் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் சந்திப்பு? நித்தியானந்தா வெளியிட்ட பதிவால் வெடித்தது சர்ச்சை!