லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி வேட்டை.. ஆட்டம் கண்ட சென்னை மாநகராட்சி.. 7 அலுவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்!
Chennai Corporation Employees Suspended : சென்னையில் கடந்த ஜூலை 3- ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 7 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஊழல் மற்றும் லஞ்சத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், ஒரு பகுதியாக, தமிழகத்தில் அதிக பணம் புழக்கம் இருக்கும் அரசுத்துறை அலுவலகங்களான மாநகராட்சி அலுவலகம், நகராட்சி, ஊராட்சி, சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் அந்தந்த மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜூலை 3- ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் ராயபுரம், திரு. வி. க. நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. இதில், ராயபுரத்தில் ரூ. 64,500, திரு. வி. க. நகரில் ரூ. 38, 500, அண்ணா நகரில் ரூ. 23,050 ஆகிய ரொக்கம் ஜி பே மூலம் பெறப்பட்டிருந்தது.
ரூ.4 லட்சத்து 19 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல்
இதே போல, கோடம்பாக்கத்தில் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம், பெருங்குடியில் ரூ. 23 ஆயிரத்து 500, தேனாம்பேட்டையில் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம் ரொக்கம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. மொத்தத்தில் ரூ. 4 லட்சத்து 19 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பாக ஆணையர் சமீரன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதில்,
மேலும் படிக்க: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி.. சிவகங்கையில் கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரிகள்!




7 அரசு அலுவலர்கள் சஸ்பெண்ட்
- திரு. வி. க. நகர் மண்டலத்தில் செயற்பொறியாளர் சரவணன்.
- உதவி செயற்பொறியாளர் ரவிவர்மன்.
- திரு. வி. க. நகர் மண்டலத்தில் உதவி பொறியாளர் சரஸ்வதி.
- இளநிலை உதவியாளர் மணிகண்டன்.
- தேனாம்பேட்டை மண்டல கணக்கு பிரிவு கண்காணிப்பாளர் ஸ்ரீ ராமுலு.
- சுகாதார அலுவலர் மஞ்சித் ஹுசைன்.
- தேனாம்பேட்டை மண்டல தூய்மை பணி மேற்பார்வையாளர் கோதண்டன் ஆகிய 7 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு வட்டாரங்களில் கடும் அதிர்ச்சி
அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக இவர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதன் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் ஒரே நாளில் 7 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ஆன்லைன் பண மோசடியா? மின்-பூஜ்ஜிய எப்ஐஆர் அறிமுகம்.. தமிழக அரசு அதிரடி!