பள்ளி மாணவர்களின் ஜாதி விவரங்கள் கட்டாயம்.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு!
Tamilnadu Education Department : தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஆதார் எண், ஜாதி விவரங்கள் உள்ளிட்டவற்றை கட்டாயம் கேட்டு பெற்று பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு துறைகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், மாணவர்களின் ஆதார் எண், அவர்களின் குடும்ப வருமானம் உள்ளிட்ட முழு விவரங்கள் மற்றும் மாணவர்களின் ஜாதி உள்ளிட்ட விவரங்களை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் கேட்டு பெற வேண்டும். இதில், மாணவர்களின் ஆதார் எண், மாணவர்களின் ஜாதி ஆகியவற்றை குறிப்பாக கேட்டு பெற வேண்டும் என்றும், அது குறித்த விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்
அத்துடன், மாணவர்களின் விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், அந்த விவரங்களில் ஏதேனும் குளறுபடிகள் அல்லது தவறுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்கள் தான் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். மேலும், தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் சமூக பிரிவு மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க : தமிழக அமைச்சர்களுடன் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் சந்திப்பு? நித்தியானந்தா வெளியிட்ட பதிவால் வெடித்தது சர்ச்சை!




அரசின் திட்டங்கள் மாணவர்களை சென்றடைய
மாணவர்கள் சேர்க்கையின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஜாதி சான்றிதழின் அடிப்படையில் இந்த விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில், ஏதேனும் தவறுகள் இருந்தால் அவற்றை உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும். மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச மிதிவண்டிகள், மடிக்கணினிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்கள் தகுதியான மாணவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்காக இந்த முறை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களி உயர்கல்வி தாமதம் தவிர்ப்பு
வருவாய்த்துறை மூலமாக வழங்கப்படும் ஜாதி சான்றிதழ் மற்றும் இதர விவரங்களை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, பள்ளி பதிவேடுகளுடன் இணைப்பதன் மூலமாக எதிர்காலத்தில் மாணவர்கள் மேல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் நேற்று ஆய்வு… இன்று அதிரடி ஆக்சன்.. முழு விவரம் உள்ளே!