தமிழக அமைச்சர்களுடன் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் சந்திப்பு? நித்தியானந்தா வெளியிட்ட பதிவால் வெடித்தது சர்ச்சை!
Kailasa Representatives Met TN Ministers: கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் தமிழக அமைச்சர்கள் 3 பேரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக நித்தியானந்தா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி உள்ளது.
தமிழக போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா என்பவர் கைலாச எனும் நாட்டில் தலைமறைவாகி வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், கைலாச நாட்டின் பிரதிநிதிகள் தமிழக அமைச்சர்களான லோகேஷ், ஸ்ரீநாத், வன்னி அரசு ஆகிய 3 பேரை சந்தித்து ராஜாங்க ரீதியிலான உறவுகள் குறித்து பேசியதாக கடந்த ஜூலை 16- ஆம் தேதி நித்யானந்தா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர்களுடனான இந்த சந்திப்பின்போது, சுவாமி நித்யானந்தா எழுதிய யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா, கைலாசாவின் வரலாறு ஆகிய இரு புத்தகங்களை அமைச்சர்களுக்கு அந்த நாட்டின் பிரதிநிதிகள் பரிசாக அளித்துள்ளனர். இந்த புத்தகம் சனாதன தர்மத்தின் மீட்சிக்கும், அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமைச்சர்களை சந்தித்த புகைப்படங்கள் வெளியீடு
இது மட்டும் இன்றி தமிழக அமைச்சர்களை கைலாச நாட்டு பிரதிநிதிகள் சந்தித்த புகைப்படங்களையும் நித்தியானந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக தலைமைச் செயலாக வட்டாரங்கள் கூறுகையில், நித்தியானந்தா கூறியது போல எந்த அரசாங்க ரீதியான சந்திப்பும் தமிழக அமைச்சர்களுடன் நடைபெறவில்லை. அமைச்சர்களிடம் மனு அளிப்பதற்காக தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். அதேபோல, வருகை தந்தவர்கள் புத்தகங்களை கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: காங்கிரஸை ஓரங்கட்டிய திமுக.. நாடாளுமன்றத்தில் தனிப் பாதை.. தமிழ்நாட்டுப் பகை டெல்லியில் எதிரொலி!




நித்தியானந்தாவின் பதிவு தவறானது
இது தவிர பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை. எனவே, நித்தியானந்தா சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு தவறான தகவல் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, அந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய்க்கு நித்தியானந்தா வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நித்தியானந்தா எதற்காக தலைமறைவாக உள்ளார்
நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு, குழந்தைகள் கடத்தல் போன்ற புகார்களின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே, அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். இவர், கடந்த 2019- ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு திடீரென வெளியேறினார். அதன் பின்னர் கைலாச என்ற தனி நாட்டை உருவாக்கியதாகவும், அந்த நாட்டில் வசித்து வருவதாகவும் அவர் வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருந்தார். இவர் மீது சர்வதேச போலீசார் ரெட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பழனி கோயில் நில மோசடி வழக்கு.. சார் பதிவாளர் அலுவலக கதவுகளைப் பூட்டி சிபிசிஐடி விசாரணை!!