பழனி கோவில் நில மோசடி.. சிபிசிஐடி அதிரடி வேட்டை.. தலைமறைவான கும்பலுக்கு வலைவீச்சு!
Palani Land Irregularities Case: பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்கள் பலர் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகி உள்ளனர் . அவர்களை கண்டறியும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முருகதாஸ் என்பவர் கடந்த ஜூலை 6- ஆம் தேதி திருப்பூரை சேர்ந்த வெள்ளதுரை, பழனி மற்றும் பழனியை சேர்ந்த சேதுபதி ஆகியோருக்கு ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். இது தொடர்பாக கோவில் நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பழனி அடிவாரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு பயந்து தேவஸ்தான அதிகாரிகள், பதிவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலக்கத்தில் உள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் பலருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.
நில முறைகேடு வழக்கில் பலர் தலைமறைவு
இந்த நிலையில், நிலத்தை விற்பனை செய்த திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையை சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளதுரை, சேதுபதி ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். இவர்களது செல்போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. பத்திரப்பதிவு நாளின் போது, சாட்சி கையெழுத்து போட்டவர்களும் தலைமறைவாக உள்ளனர். இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ், வெள்ளதுரை, சேதுபதி, பழனி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
மேலும் படிக்க: “திமுக, அதிமுகவை தூள் தூளாக்கிவிட்டு புதிய ஆட்சி மலர்ந்துள்ளது”.. முதல்வர் விஜய்க்கு வைகோ பாராட்டு!




சார் பதிவாளர்- பதிவாளர் பணியிடை நீக்கம்
இதில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் அரசியல் பின்புலம் உள்ள நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அசோக் குமார் அகர்வால் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், சிபிசிஐடி மதுரை காவல் கண்காணிப்பாளர் ஷஜிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை
இது தொடர்பாக கோவில் கண்காணிப்பாளர் முருகானந்தம், செயல் அலுவலர் கணபதி, கண்காணிப்பாளர் சிவனேசன், கோவில் நிலங்கள் பணிகளை மேற்கொண்ட ஓய்வு பெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வு பெற்ற விஏஓ சின்னசாமி ஆகியோரிடம் 4 மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்தனர். மேலும், ஒட்டன்சத்திரம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சஞ்சய் காந்தியிடம் மடத்துக்குரிய நிலம் சம்பந்தமான ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் பெற்று விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: பழனி கோயில் நில மோசடி வழக்கு.. சார் பதிவாளர் அலுவலக கதவுகளைப் பூட்டி சிபிசிஐடி விசாரணை!!