பழனி முருகன் கோயிலில் 45 நாள்கள் ரோப் கார் சேவை செயல்படாது.. என்ன காரணம்!
Palani Murugan Temple Rope Car : பழனி பால தண்டாயுபாணி முருகன் கோயிலில் வருகிற ஜூலை 20- ஆம் தேதி முதல் பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது .
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆறுபடை வீடுகளில் 3- ஆம் படை வீடான தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு பல்வேறு விசேஷ நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கமாகும். இதனால், கோவில் வளாகத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் இருந்த வண்ணமாக இருக்கும். இந்த கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து மேலே செல்வதற்காக படிப்பாதை மற்றும் யானை பாதை பிரதான வழிகளாக இருந்து வருகின்றன. இது மட்டும் இன்றி, பக்தர்கள் மலை கோவிலுக்கு எளிதில் சென்று வருவதற்காக ரோப் கார் சேவை மற்றும் மின் இழுவை ரயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில், வருகிற ஜூலை 20- ஆம் தேதி முதல் பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை செயல்படாது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பக்தர்கள் விரும்பும் ரோப் கார் சேவை
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் வழியாக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை பார்த்து ரசித்த படியும் சென்று வரலாம். இதற்காக, பெரும்பாலான பக்தர்கள் ரோப் காரின் செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இந்த ரோப் கார் சேவை பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தையும் வழங்கி வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரோப் கார் சேவைக்கு பாதுகாக்கும் முக்கியம் ஆகும். அதன் அடிப்படையில், மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கமாகும்.
மேலும் படிக்க: பழனி முருகன் கோயில் நில முறைகேடு.. அதிரடி விசாரணைக்கு 3 பேர் கொண்ட குழு அமைப்பு!




ஜூலை 20- ஆம் தேதி முதல் ரோப் கார் பராமரிப்பு பணி
இதற்காக, கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, பழனி முருகன் கோவிலில் ரோப் கார் நிலையத்தில் தற்போது வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் வருகிற ஜூலை 20- ஆம் தேதி தொடங்கி சுமார் 45 நாட்கள் நடைபெற உள்ளது. எனவே, இத்தகைய காலகட்டத்தில் பழனி பால தண்டாயுதபாணி கோவிலில் ரோப் கார் சேவை செயல்படாது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மாற்று பாதைகளை பயன்படுத்தலாம்
எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதற்கு மாற்றாக மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம். இதற்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சார் பதிவாளர்.. நீதிமன்றம் விதித்த அதிரடி நிபந்தனை!