AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்..!

Heavy Rain with Strong: மன்னார் வளைகுடா மற்றும் கேரளா வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு பரவலாக இடி, மின்னல் மற்றும் மணிக்கு 50 கி.மீ வேகப் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்..!
மாதிரி புகைப்படம்
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 18 Jul 2026 14:50 PM IST

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கையின்படி, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை பள்ளிக்கரணையில் 54.8 மில்லிமீட்டர் (சுமார் 5 சென்டிமீட்டர்) மழை பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் வி.ஐ.டி சென்னை பகுதி, சென்னை அண்ணா நகர், கொரட்டூர் மற்றும் கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் மிக லேசான மழையும், காரைக்காலில் வறண்ட வானிலையும் காணப்பட்டது.

தமிழகத்தின் தற்போதைய வெப்பநிலை நிலவரம்

கடந்த ஒரு நாளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. மாநிலத்திலேயே மிக அதிகபட்சமாக மதுரை விமான நிலையப் பகுதியில் 40.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதே சமயம், குறைந்தபட்ச வெப்பநிலையாக சமவெளிப் பகுதியில் கோவை விமான நிலையத்தில் 22.2 டிகிரி செல்சியஸும், மலைப் பிரதேசமான ஊட்டியில் 10.2 டிகிரி செல்சியஸும் பதிவாகி குளுமையான சூழல் நிலவியது.

அடுத்த ஏழு தினங்களுக்கான மழை முன்னறிவிப்பு

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகப் பகுதிகள், அதேபோல் வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். ஜூலை 20 அன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 21 முதல் 24 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும்.

தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில குறிப்பிட்ட இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக 34 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்க வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான கடலோர எச்சரிக்கை

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். அதேபோல், ஜூலை 18 முதல் 22 வரை மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Follow Us