AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீடியோ மோகம் விபரீதம்… வால்பாறையில் பள்ளத்தில் விழுந்து திருச்சி இளைஞர்கள் பலி!

Valparai Accident: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வால்பாறைக்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் உயிரிழந்தனர். ஐயர்பாடி பகுதியில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் முயற்சியின் போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தேயிலைத் தோட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. சம்பவ இடத்திலேயே இருவரும் பலியான நிலையில், போலீசார் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

வீடியோ மோகம் விபரீதம்… வால்பாறையில் பள்ளத்தில் விழுந்து திருச்சி இளைஞர்கள் பலி!
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 18 Jul 2026 17:04 PM IST

கோவை மாவட்டத்தின் முக்கிய மலைச்சுற்றுலா தலமாக விளங்கும் வால்பாறை, இயற்கை எழிலும் தேயிலைத் தோட்டங்களும் காரணமாக ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வருகை தருகின்றனர். அதிகரித்து வரும் சுற்றுலா போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆழியார் சோதனைச் சாவடியில் தினசரி வாகனங்களுக்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. வார நாட்களில் 500 வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 750 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

விபத்துகளைத் தவிர்க்க தொடர்ந்து விழிப்புணர்வு

மலைப்பாதைகளில் உள்ள அபாயகரமான வளைவுகள் மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பதற்காக காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்காக பாதுகாப்பற்ற இடங்களில் நிற்க வேண்டாம் என்றும், வாகனங்களை கவனக்குறைவாக இயக்கக் கூடாது என்றும் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிலர் சாகச ஆர்வத்தில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் செயல்படுவது கவலை அளிக்கும் சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது.

வீடியோ எடுக்கும் முயற்சியில் நேர்ந்த விபத்து

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரைச் சேர்ந்த 23 வயதுடைய ரமேஷ் மற்றும் அவரது நண்பர் பூபாலன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலா வந்திருந்தனர். ரமேஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், பூபாலன் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. ஐயர்பாடி டிஸ்பென்சரி அருகே உள்ள அழகிய தேயிலைத் தோட்டப் பகுதியில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய இருவரும் சென்றுள்ளனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தேயிலைச் செடிகள் நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: சிவகங்கையில் தாசில்தார் வீட்டுக்கு குறி.. 50 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம கும்பல்.. போலீஸ் வலைவீச்சு!

போலீசார் விசாரணை தீவிரம்

இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த வால்பாறை காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். மேலும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம், வாகன வேகம், சாலை நிலை மற்றும் பிற அம்சங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இயற்கை அழகை ரசிக்கச் சென்ற இளைஞர்கள் வீடியோ பதிவு செய்யும் ஆர்வத்தில் உயிரிழந்த இந்த சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர், மலைப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும், அபாயகரமான இடங்களில் சாகச முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Follow Us