முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான நில மோசடி வழக்கு.. கரூர் நீதிமன்றம் தேதி குறிப்பு!
MR Vijayabhaskar Appears Court: கரூரில் ரூ. 100 கோடி நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் காவல் ஆய்வாளர் ஆகியோர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினார். இதில், இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் தேதி குறித்துள்ளது.
கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு அதே பகுதியில் சுமார் 22 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சார் பதிவாளர் கடந்த 2024- ஆம் ஆண்டு கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், அதிமுகவின் அப்போதைய முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கரூர் நகர காவல் ஆய்வாளராக அப்போது பணி புரிந்து வந்த பிரித்திவிராஜ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, இந்த வழக்கானது போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 1- இல் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.
கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்
இதில், முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் கரூர் நகர காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் ஆகியோர் காலை சுமார் 11 மணி அளவில் நீதிபதி பரத் குமார் முன் ஆஜராகினர். அப்போது, ரூ.100 கோடி நிலம் முறைகேடு தொடர்பாக எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் தற்போதைய காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதே போல, எதிர் தரப்பை சேர்ந்தவர்களும் தங்களது வாதங்களை முன் வைத்தனர். இதில், இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க: கடலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு.. ஆன் ஸ்பாட்டில் லஞ்சம் பெற்ற ஊழியர் சஸ்பெண்ட்!




ஜூலை 27- ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
இதை தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை ஜூலை 27- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனிடையே, அதிமுகவின் அப்போதைய முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம். ஆர். விஜயபாஸ்கர் எதிரான தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு எதிராக கரூர் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் மதியழகன் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு வாபஸ்
இந்த நிலையில், எம். ஆர். விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் அண்மையில் இணைந்தார். இதன் காரணமாக, கரூரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம். ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் தேர்தல் வழக்கு தொடுத்திருந்தார். இந்த நிலையில், அந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளதாக மதியழகன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுக நிலைப்பாடு என்ன.. திருச்சி சிவா எம்.பி. விளக்கம்!