திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்.. 1,750 கிலோ சிவப்பு தங்கம் கொள்ளை.. அரசு கிடங்கில் மர்ம நபர்கள் அத்துமீறல்!
Tirupattur Red Sandalwood Logs Stolen : திருப்பத்தூர் மாவட்டத்தில் சந்தன மர கிடங்கில் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இது தொடர்பாக திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக வனத்துறைக்கு சொந்தமான அரசு சந்தன மர விற்பனை கிடங்கு அமைந்துள்ளது. இங்கு பல்வேறு செம்மர கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான 1,750 கிலோ எடை கொண்ட 55 செம்மரக்கட்டைகள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த செம்மரக்கட்டைகள் கடந்த ஜூலை 18 -ஆம் தேதி ( சனிக்கிழமை) திடீரென திருடு போனது. இது தொடர்பாக திருப்பத்தூர் அரசு சந்தனமர விற்பனை கிடங்கு ஒற்றை பூட்டு அலுவலர் ஜோதிலிங்கம் திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கூறுகையில், திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் வனச் சரகங்களில் செம்மர வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் செம்மரக்கட்டைகள் திருப்பத்தூர் சந்தன மரக்கடலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் திருட்டு
இந்த நிலையில், கடந்த ஜூலை 18- ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சந்தன மர விற்பனை கிடங்குக்குள் அத்துமீறி நுழைந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 55 செம்மரக்கட்டைகளை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் உடனே தெரியாத நிலையில், கிடங்கில் உள்ள மரக்கட்டைகள் இருப்பு சரிபார்க்கப்பட்டபோது, இந்த திருட்டு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது தெரிய வந்தது. திருடு போன செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: மனைவி மீது சந்தேக தீ.. நள்ளிரவில் கடப்பாறையால் அடித்து கொன்ற கணவன்.. ஈரோட்டில் பரபரப்பு!




சேமிப்பு கிடங்கின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில், சேமிப்பு கிடங்கின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முதல் கட்ட விசாரணை நிறைவடைந்த உடன் இது தொடர்பான விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
கடத்தல் செம்மரக்கட்டைகள் வைக்கப்படும் இடம்
திருப்பத்தூர் சந்தன மர விற்பனை கிடங்கில் செம்மர கடத்தல் வழக்குகளில் பிடிக்கப்படும் செம்மரக்கட்டைகள் இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அரசுக்கு சொந்தமான இந்த கிடங்கில் அத்துமீறி நுழைந்து செம்மரக்கட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்.. இஸ்ரோ தலைவர் நாராயணன் நச் பதில்!